பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்.. அமெரிக்கா வந்தார் பிரதமர் மோடி..நாடு கடத்தலுக்கு முடிவு வருமா
வாஷிங்டன்: கை, கால்களில் விலங்கிடப்பட்டு இந்தியர்கள் நாடு கடத்தப்படும் விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு வந்துள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப்பை மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது நாடு கடத்தல் விவகாரமும் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்கா விதிக்கும் கடுமையான வரி விதிப்பு குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியின் 2 நாள் அமெரிக்க பயணத்தின்போது அவர் டெஸ்லா தலைவர் எலான் எஸ்க்கையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
டிரம்ப் அதிபரான பிறகு அவருடன் பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் சந்திப்பு இது. தலைநகர் வாஷிங்டனின் மையப் பகுதியில் உள்ள பிளேர் ஹவுஸில்தான் பிரதமர் மோடி தங்கவுள்ளார். இது அமெரிக்க அதிபர் மாளிகையின் விருந்தினர் இல்லமாகும்.
பிரதமர் மோடி பிளேர் ஹவுஸுக்கு வருகை தந்தபோது அங்கு கூடியிருந்த இந்திய அமெரிக்கர்கள், பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் அங்கு கூடியிருந்தனர். வந்தே மாதரம், பாரத் மாதி கி ஜெய், மோடி மோடி என்றும் அவர்கள் கோஷமிட்டனர். இந்திய அமெரிக்க தேசிய கொடிகளையும் அவர்கள் கையில் வைத்திருந்தனர்.
டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற பின்னர் அமெரிக்காவுக்கு வருகை தரும் 4வது சர்வதேச தலைவர் மோடி ஆவார். இதற்கு முன்பு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாஹு, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜோர்டான மன்னர் 2ம் அப்துல்லா ஆகியோர் டிரம்ப்பை சந்தித்துள்ளனர்.
பிரதமரான பிறகு 10வது முறையாக அமெரிக்காவுக்கு வந்துள்ளார் நரேந்திர மோடி. அதேபோல டிரம்ப்பை அதிபர் பதவியில் இருக்கும் அவர் 4வது முறையாக சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.