அரசியலிலும், சினிமாவிலும்.. நிஜமான கேப்டன் விஜயகாந்த்.. பிரதமர் மோடி புகழாரம்!

sahana
Jan 02, 2024,01:58 PM IST

- சஹானா 


திருச்சி: சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி நிஜமான கேப்டனாக திகழ்ந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


திருச்சி விமான நிலைய விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு விஜயகாந்த்துக்குப் புகழாரம் சூட்டினார். "வணக்கம், எனது தமிழ் குடும்பமே, முதலில் உங்கள் அனைவருக்கும் 2024 புத்தாண்டு நல்வாழ்த்துகள்’என தமிழில் கூறி பிரதமர் மோடி பேச்சை துவக்கினார்.


மேலும் அவர் பேசியதாவது: 




இந்த ஆண்டில் எனது முதல் நிகழ்ச்சி தமிழகத்தில் நடப்பதை பாக்கியமாக கருதுகிறேன். ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தமிழக மக்களுக்காக கொண்டுவந்துள்ளோம். இதனால் தமிழகம் மேலும் வளர்ச்சியடையும். துவங்கப்பட்ட திட்டங்களால் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும்.


கடந்த ஆண்டின் இறுதியில் மழை, வெள்ளம் மூலமாக அதிக வலிகளை அனுபவித்தீர்கள். கனமழையால் உயிரிழப்பு, பொருட்கள் இழப்புகள் ஏற்பட்டன. இதில் சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் மாநில அரசுக்கு வழங்கி வருகிறோம். துயரமான சமயங்களில் மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது. 


நிஜத்திலும் கேப்டன்


விஜயகாந்தின் மறைவு திரைத்துறைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும், மக்களுக்கும் இழப்பு. விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டனாக திகழ்ந்தவர். அவர் தான் நிஜத்திலும் கேப்டன். திரைப்படங்களில் அவரது செயல்பாடு மூலம் மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டிருந்தார். சிறந்த தேசியவாதியாக திகழ்ந்தவர் விஜயகாந்த். எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவும் மிகவும் வேதனையை ஏற்படுத்தியது. சி.வி.ராமன் போன்ற திறமையாளர்களை இந்த தமிழக மண் உருவாக்கியுள்ளது. சர் சி.வி.ராமன் போன்ற அறிஞர்களின் பங்கு நாட்டின் வளர்ச்சியில் அளப்பரியது. திருவள்ளூவர், பாரதியார் போன்ற ஞானிகள் அற்புதமான இலக்கியங்களை படைத்துள்ளனர்.


தமிழ் மொழி - தமிழகம்


நான் எப்போதெல்லாம் தமிழகம் வருகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு புதிய உத்வேகம் கிடைக்கிறது. தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை. உலகின் எந்த இடத்திற்கு சென்றாலும் தமிழ் மொழியை புகழாமல் நான் இருந்ததில்லை. எனக்கு பல தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள்; அவர்களிடம் இருந்து தமிழ் பண்பாட்டை அறிகிறேன். தமிழ் பண்பாட்டை பற்றி பேசாத நாளே இல்லை. தமிழ் பண்பாடு உலகெங்கும் பரவ வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உள்ளது. 


காசி தமிழ் சங்கமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்கின்றன. 25 ஆண்டுகளில் பாரதத்தை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும். இந்தியா உலகின் தலைசிறந்த நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. நவீன கட்டமைப்பில் முதலீடு அதிகரித்துள்ளது; அதன் நேரடி பயன் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது. ‛மேக் இன் இந்தியா’ திட்டத்தின் சிறப்பான தூதுவராக தமிழகம் மாறி வருகிறது. திருச்சியில் திறந்து வைக்கப்பட்ட புதிய முனையத்தால் வளர்ச்சி பெருகும்; விமான நிலையத்தை மேம்படுத்தப்பட்ட சாலையுடன் இணைப்பதால் வெளிநாட்டினர் வருகை அதிகரிக்கும். 


மாநில வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சி


தமிழகத்தில் ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்படுவதால் தொழில் வளர்ச்சியடையும். ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், வேலூர் ரயில் மூலம் இணைக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு முதன்முறையாக மீன்வளத்திற்கு என தனி அமைச்சகம் பா.ஜ., ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மீனவர்கள் நலனுக்காக தனி அமைச்சகம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு என தனியாக கிசான் அட்டைகள் கொடுக்கப்பட்டன. 


மாநிலத்தின் வளர்ச்சியே தேசத்தின் வளர்ச்சி என்ற நோக்கில் மத்திய அரசு செயல்படுகிறது. முன்பை விட 3 மடங்கு அதிக நிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு செலவு செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநிலங்களுக்கு ரூ.120 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பெரும் நிதியை செலவு செய்து வருகிறது. தமிழக இளைஞர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. அவர்களிடம் இருக்கும் உற்சாகம்தான் வளர்ச்சியடைந்த பாரதத்தின் நம்பிக்கையாக மாறும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.