பிரதமர் மோடி சந்திக்கும் 2வது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்..!
Aug 08, 2023,10:02 AM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு சந்திக்கும் 2வது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இதுவாகும். கடந்த முறை அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்த சந்திரபாபு நாயுடு தற்போது மோடிக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது சுவாரஸ்யமானது.
பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சிக்கு வந்தார். அது முதல் தொடர்ந்து கடந்த 9 வருடங்களாக பிரதமராக இருந்து வருகிறார். அவரது முதல் ஆட்சியே பெரும்பான்மை பலத்துடன்தான் அமைந்தது. இதனால் தொடர்ந்து அவரது அரசு ஆணித்தரமாகவே செயல்பட்டு வருகிறது. 2வது முறை ஆட்சியைப் பிடித்தபோது அறுதிப் பெரும்பான்மையுடன் அசுர பலத்துடன் ஆட்சியில் அமர்ந்தார் பிரதமர் மோடி.
மோடி அரசைப் பொறுத்தவரை தற்போது 2வது முறையாக அது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்திக்கிறது. இதற்கு முன்பு 2018ம் ஆண்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது அதைக் கொண்டு வந்தவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. அந்தத் தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பின்போது அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகளும், எதிராக 126 வாக்குகளும் விழுந்தன. இதனால் தீர்மானம் தோற்றுப் போனது.