"சர்ச்சையே வேண்டாம்".. திருவள்ளுவர் படம் போடாமல்.. பிரதமர் மோடி சூப்பர் வாழ்த்து!

Su.tha Arivalagan
Jan 16, 2024,06:29 PM IST

டெல்லி: திருவள்ளுவர் தினத்தையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி காவி உடையில் திருவள்ளுவர் படத்துடன் போட்டிருந்த வாழ்த்து செய்தி சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சையைத் தவிர்க்கும் வகையில் திருவள்ளுவர் படமே போடாமல் சிம்பிளாக வாழ்த்து கூறி அசத்தியுள்ளார்.


இன்று திருவள்ளுவர் தினமாகும். திருவள்ளுவர் ஆண்டு, 2055 ஆகும் (அதாவது நடப்பு ஆண்டுடன் 31 ஆண்டுகளைக் கூட்டினால் வருவதுதான் திருவள்ளுவர் ஆண்டு). இதையொட்டி தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர். மதுக் கடைகளும் தமிழ்நாடு முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படத்துடன் கூடிய வாழ்த்துச் செய்தியை ஆளுநர் ஆர். என். ரவி வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.  ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அப்படியே நேர் எதிர்மாறாக சூப்பரான வாழ்த்தை வெளியிட்டுள்ளார். பாஜகவினர் பலரும் காவி உடை வள்ளுவர் படத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, வள்ளுவர் படத்தால் யாருடைய மனதும் புண்பட்டு விடக் கூடாது என்பதற்காக  படமே போடாமல்தான் வாழ்த்து கூறுவது வழக்கமாகும்.




கடந்த ஆண்டும் அதுபோலத்தான் அவர் வாழ்த்து கூறியிருந்தார். இந்த ஆண்டும் அவர் வள்ளுவர் படமே போடாமல் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  

தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம்  வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது.  காலத்தால் அழியாத அவரது போதனைகள்   நல்லொழுக்கம் மற்றும் நேர்மையில் கவனம் செலுத்த சமூகத்தை ஊக்குவிக்கிறது, நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு கொண்ட உலகத்தை உருவாக்குகிறது. 


அவர் எடுத்துரைத்த    அனைவருக்குமான விழுமியங்களைத் தழுவுவதன் மூலம் அவரது தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் நமது உறுதிப்பாட்டை நாம்  வலியுறுத்துவோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். திருவள்ளுவரை, தலை சிறந்த தமிழ்ப் புலவர் என்று அழுத்தம் திருத்தமாக கூறியுள்ள பிரதமர் மோடி, தனது வாழ்த்தில் வேறு எந்த மத அடையாளத்தையும் புகுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.