நல்ல தலைவர், பொருளாதார மேதையை நாடு இழந்து விட்டது... பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
டில்லி : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். மன்மோகன் சிங் உடனான தன்னுடைய பழைய நினைவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய 92வது வயதில் இன்று காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, மன்மோகன் சிங்கின் சாதனைகள், திறமைகள், பொருளாதார நிபுணத்துவத்தை புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மன்ேமாகன் சிங் உடனான புகைப்படங்களை பகிர்ந்து, இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதிவில், மிகச் சிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கை நாடு இழந்துள்ளது. இந்த இறப்பிற்கு நாடே துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான குடும்பத்தில் இருந்து வந்து, அனைவரும் மதிக்கும் மதிப்புமிக்க பொருளாதார நிபுணராக உயர்ந்தவர் மன்மோகன் சிங். அவர் நிதியமைச்சர் உள்ளிட்ட அரசு பதவிகளையும் வகித்துள்ளார். தன்னுடைய பொருளாதா கொள்கையால் பல ஆண்டுளாக வலுவான முத்திரை பதித்தார். பார்லிமென்டில் அவரது செயல்பாடுகளும் புத்திசாலித்தனம் மிக்கதாக இருந்தன. ஒரு பிரதமராக நாட்டு மக்களின் வாழ்க்கையை தரத்தை உயர்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
அவர் பிரதமராக இருந்த போது நான் குஜராத்தின் முதல்வராக இருந்தேன்.அப்போது தொடர்ந்து அவருடன் நான் கலந்துரையாடுவேன். அரசு தொடர்பான பல விஷயங்கள் குறித்து நாங்கள் விரிவாக பேசுவோம். எப்போதும், அனைத்திலும் அவர் மனிதநேயம், ஞானம் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். மிகவும் துக்கமான இந்த நேரத்தில் மன்மோகன் சிங் அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், கணக்கில்லாத தொண்டர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்