மோடி அரசு மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

Su.tha Arivalagan
Aug 10, 2023,07:34 PM IST

டெல்லி: பிரதமர் நரந்திர மோடி அரசுக்கு எதிராக "இந்தியா" கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் இன்று தோல்வியுற்றது.


மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானம் கடந்த 2 நாட்களாக விவாதம் நடந்து வந்தது. நேற்று ராகுல் காந்தியும், அமித்ஷாவும் பேசினர்.


இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். முன்னதாக பிற்பகல் 2.45 மணிக்கு மேல் பிரதமர் மோடி, லோக்சபாவுக்கு வருகை தந்தார். அவரை பாஜக எம்.பிக்கள் வாழ்த்தி முழக்கமிட்டு வரவேற்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்து கோஷமிட்டனர்.


அதன் பின்னர் 5 மணிக்கு மேல் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றத் தொடங்கினார். கிட்டத்தட்ட  2 மணி நேரத்திற்கும் மேலாக பிரதமர் உரையாற்றினார். அவரது உரையின்போதே எதிர்க்கட்சிகள் கூண்டோடு வெளிநடப்புச் செய்து விட்டன. பிரதமர் பேச்சுக்குப் பின்னர் குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். அதில் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இதைத் தொடர்ந்து லோக்சபா நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.




முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்:


நாட்டு மக்கள் இந்த அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளனர். கோடானு கோடி மக்களுக்கும் நன்றி சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எனது அரசை மக்களுக்கு விளக்க நல்ல வாய்ப்பு.



கடவுள் மிகவும் கருணையானவர்..கடவுளின் ஆசி இந்த ஆட்சிக்கு உள்ளது. கடவுளின் ஆசி ஆட்சிக்கு இருப்பதால்தான் இந்த தீர்மானத்துக்கு வழி வகுத்தார். 2018ம் ஆண்டு நடந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின்போது நான் பேசுகையில்,   இது எனக்கான வாக்கெடுப்பு அல்ல, அவர்களுக்கான வாக்கெடுப்பு என்றேன். அதன் பிறகு தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பதில் கொடுத்தனர்.





ஒரு வகையில் இது எங்களுக்கு நல்லதுதான். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப் போவதை நீங்கள் உறுதி செய்து விட்டீர்கள். மிகப் பெரிய வெற்றியை பாஜக பெறும். அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும்.  மக்களின் ஆசியுடன் இது நடக்கும்.



மக்களின் நம்பிக்கையை இழக்கும் வகையிலேயே எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. அவர்களது நடத்தையால் இந்த நாடு கவலை அடைந்துள்ளது.  அவர்களுக்கு ஏழை மக்களை விட அதிகாரத்தைக் கைப்பற்றுவதே குறியாக இருக்கிறது. நீங்கள் நாட்டின் எதிர்காலம் குறித்துக் கவலைப்படுவதே இல்லை.


எதிர்க்கட்சிகள்தான் பீல்டிங் செய்கின்றன. அவர்கள் நோ பால்களாக வீசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசுகிறோம். சதம் அடிக்கிறோம். நீங்கள் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும், கடினமாக முயல வேண்டும். நான் உங்களுக்கு ஐந்து ஆண்டுகளைக் கொடுத்தேன். நீங்கள் அதை வீணடித்து விட்டீர்கள். இன்னும் நீங்கள் தயாராகவில்லை.


நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தை அதிர் ரஞ்சன் செளத்ரிதான் தொடங்கி வைத்திருக்க வேண்டும். ஆனால் ஏன்  அவர் தொடங்கவில்லை என்று தெரியவில்லை. அவருக்காக நான் பரிதாபப்படுகிறேன்.


லஞ்ச லாவண்யமற்ற இந்தியா


ஊழலற்ற, லஞ்ச ல���வண்யமற்ற இந்தியாவை உருவாக்கியிருக்கிறோம். கடும் வறுமையை ஒழித்து விட்டோம். எங்களது நோக்கமெல்லாம் நாட்டின் வளர்ச்சி மீது மட்டுமே உள்ளது. இதுதான் இப்போது தேவை. நமது இளைஞர்கள் நிறைய கனவுகளை காணவும், அதை நிஜமாக்கவும் சக்தி படைத்தவர்களாக உள்ளனர். இளைஞர்களுக்கு நம்பிக்கையையும், வாய்ப்புகளையும் கொடுத்துள்ளோம்.




என்னைக் கடந்த 3 நாட்களாக அவதூறாகப் பேசி வந்தனர். எனக்கு எதிராக அனைத்து வகை வார்த்தைகளையும் பயன்படுத்தினர். ஆனால் அவர்கள் சொன்ன அத்தனை அவதூறுகளையும் டானிக் போல எடுத்துக் கொண்டேன்.  நான் இந்த சபையில் ஒரு ரகசியத்தைச் சொல்ல விரும்புகிறேன்.. எதிர்க்கட்சிகளிடம் ரகசிய சக்தி உள்ளது. யாராவது தோற்க வேண்டும் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் நினைக்கும் நபர் மாபெரும் வெற்றி பெறுகிறார். நானே அதற்கு உதாரணம்.



வங்கித் துறை குறித்து வதந்தி பரப்ப நினைத்தனர். ஆனால் பொதுத்துறை வங்கிகளின் நிகர லாபம் இரட்டிப்பாகியுள்ளது. நிதியமைச்சர் இதை விளக்கிக் கூறியுள்ளார்.  ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிட்டெட் நிறுவனம் குறித்து நிறைய அவதூறு பேசினர். வதந்திகள் பரப்பினர். அந்த நிறுவன ஊழியர்களைத் தூண்டி விடவும் முயன்றனர். ஆனால் அந்த நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.