ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு உதவுபவர்களையும் வேரறுப்போம்.. பிரதமர் மோடி ஆவேசம்

Su.tha Arivalagan
Apr 24, 2025,06:35 PM IST

மதுபானி (பீகார்): காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவியவர்களையும் தேடிப்பிடிப்போம்.. ஒவ்வொருவரையும் கடுமையாக தண்டிப்போம். கற்பனை  கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு தண்டனை தருவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடக் கூறியுள்ளார்.


பனிபடர்ந்த இமயத்தின் மடியில் அமைந்திருக்கும் பஹல்காம், அமைதியின் உறைவிடமாக, இயற்கை எழில் கொஞ்சும் சொர்க்கபுரியாக திகழ்ந்தது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன், அங்கு நிகழ்ந்த கோரத்தாண்டவம் அமைதியின் முகமூடியை கிழித்தெறிந்து, தேசத்தின் ஆன்மாவை உலுக்கியது. சுற்றுலாப் பயணிகளின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதல், வன்முறையின் விஸ்வரூபத்தை வெளிக்காட்டியது.


கண்ணிமைக்கும் நேரத்தில், அமைதி சூழ்ந்திருந்த அந்த நிலம், ரத்த வெள்ளத்தில் மூழ்கியது. 25 சுற்றுலாப் பயணிகளின் அலறல் சத்தமும், தீவிரவாதிகளுடன் துணிச்சலாக மோதிய காஷ்மீர் மண்ணின் மைந்தன் சையத் ஷாவின் மரண ஓலமும், தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது. 




இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. படிப்படியாக ஒவ்வொரு நடவடிக்கையாக இந்தியா அறிவித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் தரப்பு மிரண்டு போய்க் காணப்படுகிறது. இந்த முறை இந்தியாவின் அதிரடி பலமாக இருக்கும் என்று பலரும் கணிக்கிறார்கள்.


இந்தப் பின்னணியில் பீகார் மாநிலம் மதுபானியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்போருக்கும் கடும் எச்சரிக்கை விடுத்து பிரதமர் மோடி பேசினார். பிரதமரின் பேச்சிலிருந்து:


ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்கு மறைமுகமாக உதவுபவர்களையும், வேரறுக்க இந்தியா தயங்காது. தேசத்தின் மனவுறுதியை எந்த சக்தியாலும் தகர்க்க முடியாது. இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாதுகாப்புப் படைகள், உளவுத்துறையுடன் இணைந்து, இந்த கொடுஞ்செயலின் மூலகாரணத்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


இந்த தாக்குதல், காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க முயலும் சக்திகளின் சதி என்பதை உணர்த்துகிறது. ஆனால், காஷ்மீர் மக்கள், அமைதியையும், வளர்ச்சியையும் விரும்பும் நல்லுள்ளங்கள் நிறைந்தவர்கள். அவர்கள், இந்த வன்முறைக்கு எதிராக உறுதியாக நிற்பார்கள்.


இந்த துயரமான நிகழ்வு, தேசத்தின் ஒற்றுமையையும், உறுதியையும் சோதிக்கும் ஒரு தருணமாகும். ஆனால், இந்த சோதனையை நாம் வெற்றிகரமாக கடந்து, அமைதியையும், நீதியையும் நிலைநாட்டுவோம். காஷ்மீர், மீண்டும் அமைதியின் சொர்க்கபுரியாக மலரும். தேசத்தின் மனவுறுதி, இந்த இருளை வெல்லும் ஒளியாக பிரகாசிக்கும்.


இந்த கொடும் தாக்குதலில் சிலர் மகனை இழந்துள்ளனர். சிலர் சகோதரனை இழந்துள்ளனர். சிலர் வாழ்க்கைத் துணையை இழந்துள்ளனர். சிலர் பெங்காலி பேசியுள்ளனர், சிலர் கன்னடம் பேசியுள்ளனர், சிலர் மராத்தியும், சிலர் ஒடியாவும் பேசியுள்ளனர். சிலர் பீகாரி பேசியுள்ளனர். சிலர் குஜராத்தி பேசியுள்ளனர். மொத்த தேசமும் அவர்களுடன் உள்ளது.


கார்கில் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் வேதனையில் மூழ்கியுள்ளனர். கோபத்தில் உள்ளனர். இது அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவின் ஆன்மாவைத் தாக்க துணிந்துள்ளனர் எதிரிகள். இவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. 140 கோடி இந்தியர்களின் துணிச்சல் தீவிரவாதத்தின் முதுகெலும்பை முறிக்கும் என்றார் பிரதமர் நரேந்திர மோடி.