சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் பிரதமர் மோடி.. மோகன்லால், மம்முட்டியுடன் சந்திப்பு!
குருவாயூர்: கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்திலும் கலந்து கொண்டார். அப்போது நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி ஆகியோரையும் அவர் சந்தித்தார்.
இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள பிரதமர் மோடி குருவாயூர் சென்றார். அவரை பா.ஜ.க.,வின் முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். அவர் வரும் வழி நெடுகிலும் ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் காத்திருந்து பிரதமரை வரவேற்றனர். காலையில் குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்தார்.
அதன் பின்னர் பா.ஜ.க., எம்பியும், நடிகருமான சுரேஷ்கோபியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மலையாள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி, தமிழ்நாட்டு நடிகையும், பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு உள்ளிட்டோர் திருமண விழாவில் பங்கேற்றனர். அவர்களையும் பிரதமர் சந்தித்து உரையாற்றினார்.
பிரதமர் மோடிக்கு, நடிகர் சுரேஷ் கோபி பரிசு ஒன்றை வழங்கினார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் திருப்பாறையாறு ஸ்ரீராம சுவாமி கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார்.
இது குறித்து பிரதமர் தனது இணையதள பக்கத்தில், புனித குருவாயூர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டேன். இந்த கோவிலின் ஆன்மீக சக்தி அளப்பரியது. அதிகாலையிலேயே குருவாயூரில் ஏராளமான மக்கள் என்னை ஆசீர்வதிக்க வந்திருந்தனர். இது, மக்களுக்காக இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று என்னை எண்ணத் தூண்டியது. குருவாயூர் மக்களின் அரவணைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
வருகிற 22ம் தேதி அயோத்தியில் ராமபிரான் கோவில் திறப்பு விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று குருவாயூர் கோவிலில் வழிபாடு செய்துள்ளார் பிரதமர்.