"விஸ்வகர்மா திட்டம்".. 18 வகையான தொழிலாளர்களுக்கானது.. நாளை தொடங்கி வைக்கிறார் பிரமர்

Meenakshi
Sep 16, 2023,11:28 AM IST
புதுடெல்லி:  18 வகையான தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விஸ்வகர்மா திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

விஸ்வகர்மா என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கடந்த மாதம் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் குறிப்பிட்டார். இத்திட்டத்தை விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி நாளை தொடங்கி வைக்கிறார. பிரதமர் மோடியின் பிறந்த நாள் விழாவும் நாளை கொண்டாடப்பட உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரம்பரிய கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு நிதி ரீதியாக உதவுவது மட்டுமின்றி, பழங்கால பாரம்பரியம், கலாசாரம் மற்றும் பன்முகப் பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் பிரதமர் மோடியின் கவனம் உள்ளது. மேலும் உள்ளூர் தயாரிப்புகள், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்புக்கு ஆதரவு அளிப்பதிலும் பிரதமர் மோடி கவனம் செலுத்தி வருகிறார். 

இதற்காக சுதந்திர தினத்தன்று அறிவிக்கப்பட்ட விஸ்வகர்மா திட்டத்துக்கான மொத்த செலவினம் ரூ.13 ஆயிரம் கோடியையும் மத்திய அரசே வழங்கும். இந்த திட்டம், 'குரு சிஷ்யன்' நடைமுறை அல்லது பாரம்பரிய திறன்களின் குடும்ப தொழில் நடைமுறையை வலுப்படுத்தி வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதுடன், அவர்கள் உள்நாடு மற்றும் உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதி செய்வதே திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். 

இத்திட்டத்துக்கான பயனாளிகள் பயோமெட்ரிக் அடிப்படையிலான பிரதமர் விஸ்வகர்மா இணையதளத்தைப் பயன்படுத்தி பொது சேவை மையங்கள் மூலம் இலவசமாகப் பதிவு செய்யப்படுவார்கள். இந்த திட்ட பயனாளிகளுக்கு பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை, மேம்பட்ட பயிற்சியை உள்ளடக்கிய திறன் மேம்பாடு, ரூ.15,000 கருவித்தொகுப்பு ஊக்கத்தொகை, 5 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் ரு.2 லட்சம் வரை கடன் என பல்வேறு பலன்கள் வழங்கப்படும். 

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் சந்தைப்படுத்தலுக்கான உதவிகளும் வழங்கப்படும். இந்தத் திட்டம் நாடு முழுவதும் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கைவினைஞர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

எந்தெந்த தொழில்?

பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், சுத்தியல் மற்றும் கருவி தயாரிப்பாளர்கள், பூட்டுக்காரர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், கல் உடைப்பவர்கள், செருப்பு, கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள், முடி திருத்துபவர்கள், மாலை தயாரிப்பாளர்கள், துணி துவைப்பவர்கள், தையல்காரர்கள் மற்றும் மீன்பிடி வலை தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட 18 வகை தொழில் செய்பவர்கள் பயன்பெறுவார்கள்.

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தில் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியும், பயிற்சி பெற்ற பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய்யும் நிதியுதவியாக வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.