"மோடி வரட்டும்.. அப்புறம் இருக்கு".. முஷ்டியைத் தட்டும் கர்நாடக பாஜக!

Su.tha Arivalagan
Apr 19, 2023,12:46 PM IST

பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் மேஜிக்கை வைத்து தனது சரியும் செல்வாக்கை நிலைநிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. பிரமர் மோடியின் அதிரடிக் கூட்டங்களுக்கும் கர்நாடக பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.

கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் தக்க வைக்க பாஜக தீவிரமாக உள்ளது. ஆனால் அக்கட்சிக்கு நேரம் சரியில்லையோ என்னவோ, எல்லாமே ஏடாகூடமாகவே நடந்து வருகிறது. பல முக்கியத் தலைவர்கள் கட்சியை விலகி விட்டனர். அதில் முக்கியமானவர் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்.



மறுபக்கம் காங்கிரஸுக்கு சாதகமாக பல விஷயங்கள் நடந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகளும் கூறியுள்ளன. இதனால் காங்கிரஸ் தரப்பு மிகுந்த உற்சாகத்துடன் தீவிர வாக்கு வேட்டையாடி வருகிறது. மக்களும் ஆளும் பாஜக மீது கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.

உள்ளூர் தலைவர்கள் அனைவருமே மக்கள் மத்தியில் கெட்ட பெயர் எடுத்துள்ளதால் பிரதமர் நரேந்திர மோடியை மட்டுமே பாஜக நம்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவரது வசீகரமும், செல்வாக்கும் மட்டுமே பாஜகவுக்கு சாதகமாக எதையாவது செய்ய முடியும் என்று பாஜக நம்புகிறது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடியை வைத்து ஏராளமான பொதுக்கூட்டங்களை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த சில வாரங்களில் கர்நாடகத்தில் பிரதமர் மோடி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். கிட்டத்தட்ட அவரை வைத்து 25 பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இதுதவிர பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் என பெரும் படையை களத்தில் இறக்கி பாஜகவுக்காக வாக்கு வேட்டையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து யாராவது ஒரு தலைவர் கர்நாடகத்திற்குச் சென்று பிர்ச்சாரம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாம்.

பிரதமர் தவிர உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டா, அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய ஸ்டார் தலைவர்களும் பிரச்சாரம் செய்யவுள்ளனர். பிரதமரின் சுற்றுப்பயணம் ஏப்ரல் 24ம் தேதி தொடங்கவுள்ளது. சாலைமார்க்கமாக வாகனத்தில் பயணித்தும் மக்களை சந்திக்கவுள்ளார் பிரதமர். இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாஜக நம்புகிறது.

இப்படி பாஜக பலமுனைகளிலும் காங்கிரஸை முடக்க முயற்சித்து வரும் நிலையில் அக்கட்சிக்கு பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது ராகுல் காந்தி மட்டுமே. அதை அக்கட்சி வெகு அழகாக பயன்படுத்தி வருகிறது. அதேசமயம், உள்ளூர் தலைவர்கள் அனைவருமே தங்களது கோஷ்டிப் பூசலை ஓரம் கட்டி விட்டு ஒற்றுமையுடன் பணியாற்றுவதை மக்களே கூட ரசிக்கும் நிலைதான் காணப்படுகிறது.