பிரதமராக பொறுப்பேற்றார் நரேந்திர மோடி.. விவசாயிகள் நல நிதித் திட்ட கோப்பில் முதல் கையெழுத்து!

Su.tha Arivalagan
Jun 10, 2024,05:31 PM IST

டெல்லி: பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி இன்று முற்பகல் 11.30 மணிக்கு பிரதமர் அலுவலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து பிரதம மந்திரி கிஷான் நிதி என்ற விவசாயிகள் நல நிதித் திட்டம் தொடர்பான கோப்பில் அவர் முதல் கையெழுத்திட்டார்..


3வது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார் நரேந்திர மோடி. கூடவே 71 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று முற்பகல் 11. 30 மணிக்கு தனது அலுவலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார் பிரதமர் மோடி. அதேபோல அமைச்சர்களும் அவரவர் அலுவலகம் சென்று பொறுப்பேற்கவுள்ளனர். 


பிரதமர் மோடியின் இன்றைய முதல் முன்னுரிமை அமைச்சரவைக் கூட்டம்தான். மாலை 5 மணிக்கு முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிகிறது.  அமைச்சரவைக் கூட்டத்தில் மக்களவைக் கூட்டத்தை கூட்டுமாறு குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றப்படும். இன்று மாலை நடைபெறும் கேபினட் கூட்டத்தைத் தொடர்ந்து அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.


இதைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் கூட்டப்பட்டு அதில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றுவார். அதன் பின்னர் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு எம்.பிக்கள் பதவியேற்பு நடத்தப்படும். இதைத்  தொடர்ந்து சபாநாயகர் தேர்தல் நடைபெறும்.


சபாநாயகராக யார் தேர்வு செய்யப்படப் போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.  சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்டு வந்தது. கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போது லோக்சபா சபாநாயகர் பதவி தெலுங்கு தேசம் கட்சிக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முறை அதைத் தர பாஜக மறுத்து வருவதாக சொல்லப்படுகிறது. எனவே சபாநாயகர் பதவியில் யார் அமரப் போகிறார் என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.