"சிவசக்தி".. நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடத்துக்குப் பெயர்.. பிரதமர் மோடி சூட்டினார்!

Su.tha Arivalagan
Aug 26, 2023,10:29 AM IST

பெங்களூரு: வெளிநாட்டுப் பயணத்தை முடித்த கையோடு பெங்களூரு வந்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு இஸ்ரோ மையத்திற்குச் சென்று சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிய விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பாராட்டினார். அப்போது விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.


இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் தனது திட்டத்தை முழுமையாக நிறைவேற்றியுள்ளது. முதலில் வெற்றிகரமாக நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. அதன் பின்னர் அதன் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கியது. அதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து அதனுள் இருந்த பிரக்யான் ரோவர் பத்திரமாக வெளியே வந்தது. தற்போது அதன் ஆய்வுப் பணிகளும் வெற்றிகரமாக தொடங்கி விட்டன.





சந்திரயான் 3 கிளைமேக்ஸ் சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவில் இருந்தார். அங்கிருந்தபடியே அதைப் பார்த்து மகிழ்ந்தார். பின்னர் ஏதென்ஸ் சென்ற அவர் தனது வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினார். நேராக அவர் பெங்களூருக்கு வந்தார்.


இங்குள்ள இஸ்ரோ மையத்திற்கு வந்த பிரதமரை விஞ்ஞானிகள் கை தட்டி உற்சாகமாக வரவேற்றனர். பிரதமர் மோடியும் கைகளைத் தட்டியபடி விஞ்ஞானிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் விஞ்ஞானிகளைப் பாராட்டியும், நன்றி கூறியும் உரையாற்றினார். தனது பேச்சின்போது சந்திரயான் 3 இறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிடுவதாக அறிவித்தார். மேலும் சந்திரயன் 2 நொறுங்கி விழுந்த இடத்திற்கு திரங்கா பாயின்ட் என்று பெயர் வைப்பதாகவும் பிரதமர் மோடி அறிவித்தார்.

 



பிரதமர் பேசும்போது,   நிலவில் தரையிறங்கும் இடத்திற்குப் பெயரிடுவது மரபாகும். அந்த அடிப்படையில், விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு சிவ சக்தி என்று பெயரிடுகிறேன். அந்த இடம் இனி சிவசக்தி பாயின்ட் என்று அழைக்கப்படும்.  சிவ சக்தியில் அடங்கிய சக்தியானது கடின உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும், ஊக்க சக்தியாலும், பெண்கள் முன்னேற்றத்தாலும் கிடைத்தது என்றார் பிரதமர் மோடி.