சென்னையில் பிரதமர் நரேந்திர மோடி.. கேலோ இந்தியா விளையாட்டு விழாவை தொடங்கி வைக்க வருகை

Manjula Devi
Jan 19, 2024,06:34 PM IST

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 3 நாள் பயணமாக இன்று சென்னை வருகை தந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்ட்டது. சென்னையில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு துவங்கி வைக்கிறார். இதற்காக அவர் பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். 


விமான நிலையத்தில் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர். அதைத் தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் கடற்படைத் தளத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.


இதையடுத்து சாலை மார்க்கமாக பிரதமர் மோடி, பெரியமேடு பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திற்கு சென்றார்.  வரும் வழியெல்லாம் கூடியிருந்த பாஜக தொண்டர்கள், பிரதமர் மோடியை மலர் தூவியும், மோடி மோடி, பாரத் மாதி கி ஜெய் போன்ற கோஷங்களை முழங்கியும் வரவேற்பு அளித்தனர். 




இந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். இதன் பின்னர் நாளை 20ஆம் தேதி காலை திருச்சி செல்லும் பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் சென்று சாமி தரிசனம் செய்கிறார். அங்கு அவருக்காக கோவிலில் சிறப்பு பூஜைகள்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இதில் கலந்து கொண்ட பிறகு அங்கிருந்து மதியம் ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசனம் செய்துவிட்டு, நாளை(20.1.24 ) இரவு  ராமகிருஷ்ணா மடத்தில் பிரதமர் தங்குகிறார். நாளை, மறுநாள் (21.1.24) ராமேஸ்வரத்தில் உள்ள 22 அக்னி புனித தீர்த்தங்களில் நீராடி விட்டு, புனித தீர்த்தங்களை சேமித்துக் கொண்டு அவர் மதுரை திரும்புவார். மதுரையிலிருந்து சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார்.


பலத்த பாதுகாப்பு:




பிரதமர் மோடி வருகையைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி, ராமேஸ்வரம்  போன்ற இடங்களில் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தங்கும் விடுதிகள், நட்சத்திர ஓட்டல்கள், மற்றும் விடுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 


சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் தீவிர வாகன  சோதனை செய்யப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு,  பெருநகர காவல் எல்லைக் உட்பட்ட பகுதிகளில் டிரோன்கள், ஆளில்லா வான்வெளி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ராமேஸ்வரம் பாதுகாப்பு


நாளை பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை ராமநாதசுவாமி கோயில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை.


போக்குவரத்து மாற்றம்




பிரதமர் மோடி வருகையால் பாதுகாப்பு கருதி  நாளை, நாளை மறுநாள் ராமேஸ்வரத்தில் போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் நகரில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொது போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. தனுஷ்கோடி போன்ற சுற்றுலா தலத்திற்கு செல்ல போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது  என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் முக்கியக் கோவில்களுக்கு பிரதமர் மோடி விஜயம் செய்து வருகிறார். அந்த அடிப்படையில் ராமேஸ்வரம் கோவிலுக்கும் அவர்  வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.