உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி தர வேண்டும் - பிரதமர் மோடி கூறியதாக தகவல்
டெல்லி: தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து பேசிய பேச்சுக்கு சரியான பதிலடி தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனா வைரஸ் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு அவர் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சுக்கு கண்டனங்களும், ஆதரவும் எழுந்துள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனது நிலையிலிருந்து கொஞ்சம் கூட மாறவில்லை. அதை விட முக்கியமாக, புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அழைக்கவில்லை. இதுதான் சனாதன தர்மத்தின் அடிப்படையிலான ஜாதிய பாகுபாட்டுக்கு லேட்டஸ்ட் உதாரணம் என்றும் அவர் கடுமையாக குற்றம் சாட்டியிருந்தார்.
அவரது இந்தக் குற்றச்சாட்டு நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இதை தொடர்ந்து தற்போது பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து ரியாக்ஷன் காட்டியுள்ளார். இன்று டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது எந்த மதத்தையும் யாரும் தவறாகப் பேசக் கூடாது. சனாதன தர்மம் குறித்து அவதூறாகப் பேச யாருக்கும் உரிமை இல்லை. அப்படி யாரேனும் தவறாக பேசினால் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று ஆசியான் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தோனேசியா செல்லும் முன்பு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இப்படி பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்தியா - பாரத் பெயர் தொடர்பாக ஆளாளுக்கு பேசக் கூடாது என்றும், இதுகுறித்த கருத்து கூற அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிகிறது.