தேர்தல் ஆணையர் பதவி காலியிடம்.. நிரப்புவது தொடர்பாக பிரதமர் குழு மார்ச் 15ல் ஆலோசனை

Su.tha Arivalagan
Mar 10, 2024,09:11 PM IST

டெல்லி: 2 தேர்தல் ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அந்த இடங்களை நிரப்புவது தொடர்பாக பிரதமர் நரந்திர மோடி தலைமையிலான 3 பேர் கொண்ட குழு மார்ச் 15ம் தேதி கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.


தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு காலியிடம் நிரப்பப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா செய்ததால், ஆணையர்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்து விட்டது. அதாவத 3 பேர் கொண்ட ஆணையத்தில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இருக்கிறார். மற்ற இரு ஆணையர் பதவிகளும் காலியாக உள்ளன.


நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பல்வேறு விவாதங்களும், கேள்விகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில் 2 தேர்தல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான குழு மார்ச் 15ம் தேதி கூடி ஆலோசிக்கவுள்ளது.




இக்குழுவில் பிரதமர் தவிர பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களாக உள்ளனர்.  இந்தக் குழு கூடி தேர்தல் ஆணையர்களாக யாரை நியமிப்பது என்பது குறித்து முடிவு எடுக்கும்.  


தேர்தல் ஆணையம் ஒரு ஆணையரோடு பணியில் இருப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமைத் தேர்தல் ஆணையராக நசீம் ஜைதி பதவியேற்றபோது, அவர் மட்டுமே உறுப்பினராக இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆணையர் ஒரு ஆணையரோடுதான் செயல்பட்டது. அதன் பின்னர்தான் மே மாதம் ஏ.கே.ஜோதியும், ஆகஸ்ட் மாதம் ஓ.பி. ராவத்தும் ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர். இருப்பினும் அப்போது பெரிய அளவில் தேர்தல் ஏதும் இல்லாததால் சர்ச்சை எழவில்லை. ஆனால் தற்போது லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஆணையம் ஒற்றை ஆணையரோடு இருப்பது பரபரப்பாகியுள்ளது.