நாடாளுமன்றத்தில் ஒரு பக்கம் அனல்.. மறுபக்கம் எம்.பிக்களுடன் விருந்துண்ட பிரதமர் மோடி!

Su.tha Arivalagan
Aug 04, 2023,09:57 AM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒரு பக்கம் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தொடர் போராட்டத்தால் இரு சபைகளுக்குள்ளும் அனல் வீசி வரும் நிலையில் மறுபக்கம் தென்னிந்திய எம்.பிக்களுடன் சேர்ந்து விருந்துண்டு மகிழ்ந்துள்ளார் பிரதமர் மோடி.

இதுதொடர்பாக அவர் ஒரு டிவீட் போட்டுள்ளார். அந்த டிவீட்டில், நேற்றுமாலை தென்னிந்தியாவைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்களுடன் அருமையான சந்திப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து சிறப்பான டின்னர் இடம் பெற்றது. அதில் தென்னிந்தியாவைச் சேர்ந்த உணவு வகைகள் பரிமாறப்பட்டன.  பணியாரம், அப்பம், வெஜிடபிள் குருமா, புளியோதரை, பப்பு சாரு, அடை அவியல் என ஏகப்பட்ட ஐட்டங்கள் இடம் பெற்றன என்று கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.



இந்த சந்திப்பின்போது தென்னிந்திய எம்.பிக்களுடன் மனம் விட்டுப் பேசினாராம் பிரதமர். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் வைக்கும் வாதங்களுக்கு சரியான விவாதம் நடத்துமாறும் அவர் கேட்டுக் கொண்டாராம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். ஜி.கே.வாசனை தனக்கு அருகே அமர வைத்து பாசத்துடன் பேசினாராம் பிரதமர்.

தமிழ்நாடு,  கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, தெலங்கானா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு ஆகியவற்றைச் சேர்ந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பிக்கள் இதில் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய உணவுகளை பிரதமர் ருசித்து உண்பது இது ��ுதல் முறையல்ல. கடந்த ஆண்டு அவர் கர்நாடகம் வந்திருந்தபோது மைசூரு ராஜ குடும்பத்து வீட்டு விருந்தை ரசித்துச் சாப்பிட்டார். குறிப்பாக மைசூர் பாக், மைசூர் மசாலா தோசை ஆகியவற்றை அவர் ருசித்துச் சாப்பிட்டார் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல முன்பு மாமல்லபுரம் வந்திருந்தபோதும் கூட பிரதமருக்கு தமிழ்நாட்டு உணவு வகைகள் பரிமாறப்பட்டன.