கல்லீரல் புற்று நோய்.. இளையராஜாவின் மகள் பின்னணிப் பாடகி பவதாரணி காலமானார்!

Su.tha Arivalagan
Jan 25, 2024,09:43 PM IST

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணி இன்று காலமானார்.


47 வயதான பாடகி பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவர் சிகிச்சை பெற்று வந்தார். இலங்கைக்குக் கூட்டிச் சென்று அங்கு அவருக்கு ஆயுர்வதேச சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. சில மாதங்களாக அங்குதான் அவர் சிகிச்சை பெற்று வந்ததாக சொல்கிறார்கள்.


இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பவதாரணி இன்று மாலை காலமானார். பவதாரணிக்கு கணவர் மட்டுமே உண்டு, குழந்தைகள் கிடையாது. 




பவதாரணி மறைவால் திரையுலகம் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும்  ஆழ்ந்துள்ளது. இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இரங்கல் வெளியிட்டுள்ளனர். மறைந்த பவதாரணிக்கு, கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இரு சகோதரர்கள் உள்ளனர். பவதாரணியின் தாயார் ஜீவா ஏற்கனவே காலமாகி விட்டார் என்பது நினைவிருக்கலாம்.


சிறந்த பாடகியான பவதாரணி, மயில் போல பொண்ணு ஒன்னு என்ற பாடலுக்காக சிறந்த பாடகிக்கான  தேசிய  விருது பெற்றவர். பாரதி படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் இளையராஜா. தந்தை இசையமைத்த பாடலுக்கு மகள் தேசிய விருது பெற்ற நிகழ்வு அதுதான்.


பாடகியாக வலம் வந்த பவதாரணி, தந்தையைப் போலவே இசையமைப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.