ஏப்ரல் 1.. நாளை முதல் இந்த மாற்றமெல்லாம் அமலுக்கு வருது.. மக்களே நோட் பண்ணுங்க!

Su.tha Arivalagan
Mar 31, 2024,06:17 PM IST

டெல்லி: ஏப்ரல் 1ம் தேதி புதிய நிதியாண்டு பிறக்கும் நிலையில் பல்வேறு மாற்றங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன. 


ஏப்ரல் 1ம் தேதி இந்தியாவைப் பொறுத்தவரை புதிய நிதியாண்டின் முதல் நாள் ஆகும். இந்த நாளிலிருந்துதான் பல்வேறு புதிய மாற்றங்களும், திட்டங்களும், நடைமுறைக்கு வருவது வழக்கம். அந்த வகையில் நாளை முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.


புதிய வருமான வரி விதிப்பு முறை


நாளை முதல் அமலுக்கு வரும் மாற்றங்களில் முக்கியமானது வருமான வரியில் புதிய  வரி விதிப்பு முறை. இனிமேல் சம்பளதாரர்களுக்கு இந்த புதிய வரி விதிப்பு முறைதான் Default வரி விதிப்பு முறையாக இருக்கும்.  இது வேண்டாம் என்று விரும்பினால் பழைய வரி விதிப்பு முறையை தேர்வு செய்ய வேண்டும்.  வருமான வரி உச்சவரம்பில் பெரிய மாற்றம் இல்லை, அப்படியேதான் நீடிக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் எந்தவிதமான வரிச் சலுகையும் அறிவிக்கப்பவடில்லை. 


புதிய வரி விதிப்பின்படி, தனி நபர் ஒருவர், வருடத்திற்கு ரூ. 7 லட்சம் வரை வருவாய் ஈட்டினால், வரி கட்டத் தேவையில்லை. அதேசமயம், ரூ. 9 முதல் ரூ. 12 லட்சம் வரை வருவாய் ஈட்டினால், 15 சதவீத வரி கட்ட வேண்டும். தனி நபர்களின் வருமானம் ரூ. 12 முதல் 15 லட்சத்திற்குள் இருந்தால் அவர்கள் 20 சதவீத வரி கட்ட வேண்டும். அதற்கு மேல் வருவாய் இருந்தால் 30 சதவீத வரி கட்ட வேண்டும். இதுதான் புதிய வரி விதிப்பு முறையாகும். 




பாஸ்டேக் KYC


நீங்கள் பாஸ்டேக் பயன்படுத்துகிறவரா.. அப்படியானால், நீங்கள் இன்றைக்குள் KYC அப்டேட் செய்திருக்க வேண்டும். இன்றைக்குள் அதைச் செய்திருக்காவிட்டால் நாளை அவர்கள் டோல் கேட்டுகளில் சிக்கலை சந்திக்க நேரிடலாம் அல்லது அவர்களது கணக்கும் கூட டீ ஆக்டிவேட் ஆக கூடும். எனவே இன்றைக்குள் அதைச் செய்து முடித்து விடுங்கள். ஆன்லைனிலேயே அதைச் செய்ய முடியும்.


ஸ்டேட் வங்கி டெபிட் கார்டுகளுக்கானகட்டணங்கள் உயர்வு


ஸ்டேட்  பாங்க் ஆப் இந்தியா சில வகை டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை நாளை முதல் ரூ. 75 உயர்த்துகிறது.  இதுகுறித்த தகவலை ஏற்கனவே தனது இணையதளத்தில் அது வெளியிட்டுள்ளது.