மகாளய பட்சம் : முன்னோர்கள் நம்முடைய வீடு தேடி வரும் காலம்

Su.tha Arivalagan
Sep 30, 2023,10:11 AM IST

சென்னை : நமக்கு இஷ்ட தெய்வத்தின் அருளும், நம்முடைய பிரச்சனைகள் தீருவதற்காக நாம் செய்யும் பூஜைகளுக்கான பலன்களும் நமக்கு முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்முடைய குல தெய்வத்தின் அருள் வேண்டும். அந்த குல தெய்வத்தின் அருள் கிடைத்து, நம்முடைய வீட்டில் சுப காரியங்கள் தடையின்றி நடக்கவும், நன்மைகள் பெருகவும் வேண்டும் என்றால் அதற்கு முதலில் நம்முடைய முன்னோர்களின் ஆசிகள் வேண்டும்.


முன்னோர்களின் ஆசியை பெறுவதற்காக தான் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி, சிராத்தம் கொடுக்க வேண்டும் என முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர். வருடம் முழுவதும் வரும் அனைத்து அமாவாசை நாட்களிலும் விரதம் இருந்து, முன்னோர்களுக்கு உரிய பித்ரு கடனை செலுத்த முடியாதவர்கள் வருடத்தில் முக்கியமான மூன்று அமாவாசைகளில் கண்டிப்பாக விரதம் இருந்து முன்னோர்களை வழிபட வேண்டும். தை அமாவாசை என்பது பித்ருலோகத்தில் இருந்து நம்முடைய முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காக பூமிக்கு புறப்படும் காலமாகும். ஆடி அமாவாசை என்பது நம்முடைய முன்னோர்கள் மீண்டும் பித்ருலோகத்திற்கு புறப்பட்டு செல்லும் காலமாகும்.


மகாளய பட்ச சிறப்புகள் :


வருடத்திற்கு ஒரே ஒருமுறை நம்முடைய முன்னோர்கள் நம்மை பார்ப்பதற்காக பூலோகத்திற்கு வந்து, அதுவும் நம்முடைய வீட்டிற்கே வந்து, நம்முடன் தங்கி நாம் செய்யும் வழிபாடுகள், தர்ப்பணம், தானம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு, நமக்கு ஆசி வழங்கக் கூடிய காலமே மகாளய பட்சம் என்று பெயர். மகாளயம் என்றால் ஒன்று கூடுதல், பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட காலம். நம்முடைய முன்னோர்கள் ஒன்றுகூடி வரக் கூடியதால் மகாளய பட்ச காலம் என்கிறோம். பொதுவாக அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுத்தால் யாருடைய பெயரில் தர்ப்பணம் கொடுக்கிறோமோ அது அவர்களை மட்டுமே சென்று சேரும். ஆனால் மகாளய பட்ச காலத்தில் நாம் செய்யும் தர்ப்பணம் நமக்கு முன் வாழ்ந்து மறைந்த, பெயர் தெரிந்த, தெரியாத அனைத்து முன்னோர்களையும் சென்று சேரும்.


மகாளய பட்ச விரத பலன்கள் :


தர்ப்பணம் என்றால் திருப்திபடுத்துதல் என்று பொருள். நம்முடைய முன்னோர்களை திருப்திபடுத்தி, அவர்களின் ஆசியை கண்டிப்பாக பெற வேண்டும். அவர்கள் நம்முடைய வீடு தேடி வரும் காலத்தில் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்காமல், அவர்களை நினைக்காமல் இருந்தால் அது முன்னோர்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். இந்த மனக்குறையானது நம்முடைய வாழ்வில் பல விதமான தடைகள், பிரச்சனைகள் ஆகியவற்றை ஏற்படுத்தும். அதே சமயம் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டு, முன்னோர்களின் ஆன்மா திருப்தி அடைந்தால் அது நற்கதி அடையும். அதோடு நம்முடைய குடும்பமும், நம்முடைய தலைமுறையும் அளவில்லாத நன்மைகளையும் பெறும்.


மகாளய பட்சம் 2023 தேதி :


புரட்டாசி மாதம் பெளர்ணமி துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்களும் மகாளய பட்சம் காலமாகும். இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி துவங்கி அக்டோபர் 14 வரை மகாளய பட்ச காலம் உள்ளது. இந்த 15 நாட்களும் விரதம் இருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபடுவது மிக சிறப்பானதாகும். 15 நாட்களும் அந்தணர்களை வைத்து தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தினமும் சூரிய உதயத்திற்கு பிறகு வீட்டிலேயே எளிமையாக எள்ளும், தண்ணீரும் கண்டிப்பாக இரைத்து வழிபட வேண்டும். அதற்கு பிறகு சூரியனை வழிபட்டு, வீட்டிலும் விளக்கேற்றி வழிபடலாம். பகல் வேளையில் வீட்டில் சமைக்கும் உணவை முன்னோர்களுக்கு படைத்து வழிபட வேண்டும். மாலையில் வீட்டிலோ அல்லது கோவிலிலோ ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் தீபம் முன்னோர்களை நினைத்து ஏற்றி வழிபட வேண்டும். 


மகாளய பட்ச காலத்தில் செய்ய வேண்டியவை :


மகாளய பட்ச காலத்தில் தினமும் யாராவது ஒருவருக்கு உணவு வழங்க வேண்டும். அப்படி மனிதர்களுக்கு உணவளிக்க வாய்ப்பில்லை என்றால் நாய், பூனை, பசு, காகம், எறும்பு என ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவளிக்க வேண்டும். குடை, விசிறி, போர்வை, ஆடை, உணவு தானியங்கள், செருப்பு என ஏதாவது ஒன்றை இல்லாதவர்களுக்கு தானமாக வழங்கு வது சிறப்பானது. மகாளய பட்ச காலத்தில் நாம் செய்யும் தர்ப்பணம், வழிபாடு, தானம் ஆகியவற்றை நம்முடைய முன்னோர்கள் ஏதோ ஒரு ரூபத்தில் அல்லது யாரோ ஒருவருடைய வடிவத்தில் வந்து நேரடியாக பெற்றுக் கொள்வதாக ஐதீகம். அப்படி அவர்கள் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை ஏற்றுக் கொண்டால் பல காலமாக நம்முடைய வீட்டில் தீராமல் இருக்கும் பிரச்சனைகள் தீருவதற்கு முன்னோர்களை ஏதாவது ஒரு வழியை காட்டுவார்கள்.


15 நாட்களும் வழிபட முடியாதவர்கள் செய்ய வேண்டியது :


மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்கள் வழிபாட்டை தொடர்ந்து செய்ய முடியாதவர்கள் அக்டோபர் 02 ம் தேதி வரும் மகா பரணியன்று கண்டிப்பாக முன்னோர்களை நினைத்து நல்லெண்ணெயில் தீபம் இட்டு வழிபட வேண்டும். பரணி என்பது எமதர்மனுக்குரிய நட்சத்திரமாகும். இந்த நாளில் எமதர்மனை வேண்டி வீட்டில் நாம் ஏற்றும் தீபம் நம்முடைய முன்னோர்களுக்கு மோட்சத்தை பெற்றுத் தரும். எமதர்ம ராஜனை வருடத்தில் இந்த ஒரு நாளில் மட்டுமே நாம் நினைத்து வழிபட முடியும். 


மகாளய பட்ச காலத்தில் வரும் ஒவ்வொரு திதியும் தர்ப்பணம் கொடுத்தால் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கும். இறுதியாக வரும் மகாளய அமாவாசை நாளான அக்டோபர் 14 அன்று தர்ப்பணம் கொடுத்தால் அனைத்து விதமான நலன்களும் நமக்கு கிடைக்கும்.