இஸ்லாமாபாத் டூ டோரன்டோ.. வந்த பிறகு "தாங்க்யூ பிஐஏ".. லெட்டர் வச்சுட்டு "மிஸ்" ஆன ஹோஸ்டஸ்!

Su.tha Arivalagan
Feb 29, 2024,07:23 PM IST

டோரன்டோ: இஸ்லாமாபாத்திலிருந்து டோரன்டோ நகருக்கு விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணியில் வந்த பெண், டோரன்டோ வந்த பிறகு அங்கிருந்து எஸ்கேப் ஆகி விட்டார். இதனால் பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மாயமான அந்தப் பெண் ஊழியர்,  கனடாவில் அடைக்கலம் புக விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த பெண் ஊழியரின் பெயர் மரியம் ரசா. கடந்த 15 வருடங்களாக பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தில் (PIA) பணியாற்றி வருகிறார். இவர் இஸ்லாமாபாத்திலிருந்து கனடாவின் டொரன்டோ நகருக்கு சென்ற விமானத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். விமானமானது திங்கள்கிழமை இஸ்லாமாபாத்தில் இருந்து கிளம்பி கனடாவிற்கு சேர்ந்தது. 


டோரன்டோ வந்த பின்னர் மறு மார்க்கத்தில் கராச்சிக்கு அந்த பெண் ஊழியர் பயணிப்பதாக இருந்தது. ஆனால் சம்பவ நாளன்று அவர் பணிக்கு வரவில்லை. குழப்பம் அடைந்த பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன அதிகாரிகள் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையை சோதனையிட்டபோது அங்கு அவர் இல்லாதது தெரியவந்தது. அவரது அறையில் அவரது உடமைகள் மட்டும் இருந்தது. அவரது யூனிஃபார்மும் அங்கு இருந்தது. கூடவே தேங்க் யு பி ஐ ஏ என்று எழுதிய ஒரு குறிப்பு காணப்பட்டது.




இதன் மூலம் அவர் எஸ்கேப் ஆகி விட்டது தெரிய வந்தது. இதுபோல பாகிஸ்தானில் இருந்து கனடா வந்த பின்னர் மாயமாகும் பாகிஸ்தான் சர்வதேச விமான ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம்தான் இதேபோல பாசியா முக்தர் என்ற ஏர் ஹோஸ்டஸ் பெண் இதுபோல கனடா வந்த பிறகு மாயமானார்.  கனடா நாட்டு சட்டப்படி, எந்த நாட்டவரும், கனடா வந்து இறங்கிய பின்னர் அந்த நாட்டில் அடைக்கலம் புக விண்ணப்பிக்க முடியும் என்று உள்ளது. இதனால்தான் பலரும் இதுபோல இங்கு வந்து அடைக்கலம் புகுகின்றனர்.  பாகிஸ்தான் பல்வேறு பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் அந்த நாட்டுக்காரர்கள் பலரும் இதுபோல வெளிநாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த ஆண்டு மட்டும் இரண்டு பேர் இதுபோல இங்கு வந்த பின்னர் மாயமாகியுள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் இதுபோல இங்கு வந்த பிறகு மாயமாகும் பாகிஸ்தான் சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.


இது குறித்து கனடா அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.