Tirupati temple.. திருப்பதி கோவில் உண்டியலில் ரூ.15,000 திருடியவர் கைது.. தலைக்கு தில்லுதான்!
திருப்பதி : உலகின் பணக்கார கடவுள் என பக்தர்களால் போற்றப்படும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இளைஞர் ஒருவர் ரூ.15,000 திருடிய சம்பவம் பக்தர்களிடம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்கள் அளிக்கும் உண்டியல் காணிக்கை மூலமாக தான் திருப்பதி கோவிலுக்கு அதிகமான வருமானம் கிடைத்து வருகிறது. ஒரு நாளைக்கு ரூ.3 முதல் 4 கோடி வரையிலும், வருடத்திற்கு ரூ.1500 கோடிக்கும் அதிகமாகவும் உண்டியல் வசூல் பெறப்பட்டு வருகிறது. உண்டியலில் பெறப்படும் காணிக்கைகள் பறக்கமணி சேவாதாரிகளால் தினமும் எண்ணப்பட்டு, திருமலை திருப்ப\தி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் நவம்பர் 23ம் தேதி பகல் 2 மணி அளவில் திருப்பதி கோவிலில் இருக்கும் இரும்பு உண்டியலில் இருந்து இளைஞர் ஒருவர் பணத்தை திருடி உள்ளார். அங்கிருந்த சிசிடிவி கேமிரா மூலம் இதனை கண்டுபிடித்த கோவில் பாதுகாப்பு அதிகாரிகள், போலீசாரிடம் புகார் அளித்தனர். சிசிடிவி கேமிராவில் பதிவான அடையாளங்களின் அடிப்படையில் உண்டியலில் இருந்து பணத்தை திருடிய இளைஞரை மாலை 6 மணியளவில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அவரிடம் இருந்து திருடப்பட்ட ரூ.15,000 பணம் மீட்கப்பட்டுள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் அவர் தமிழ்நாட்டின் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வேணுலிங்கம் என்பது தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நேரத்தில் பட்டபகலில் இப்படி ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளதால் திருப்பதி கோவில் உண்டியல் அருகே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவில் உண்டியலில் இருந்து பணம் திருடப்பட்டு பிறகு மீட்கப்பட்ட சம்பவம் உண்மை தான் என்பதை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் இஓ வெங்கைய்யா செளத்ரியும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்