நீங்கள் சரியான நேரத்தில் தான் சாப்பிடறீங்களா... டைம்க்கு சாப்பிடலைன்னா இவ்வளவு பிரச்சனை வருமாம்!

Aadmika
Jan 03, 2024,08:42 AM IST

சென்னை: ஒரு நாளில் நாம் எப்படி இயங்குகிறோம் என்பது அன்று நாம் சாப்பிடும் உணவை பொறுத்தே அமைகிறது. அதிலும் குறிப்பாக காலை உணவு. 


காலையில் நாம் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதாக எடுத்துக் கொண்டால் தான் அன்றைய நாள் முழுவதற்குமான சக்தியை நம்முடைய உடலுக்கு தருகிறது. நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது மட்டுமல்ல, எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம் என்ற நேரமும் நம்முடைய ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கினை வகிக்கின்றன.


சமீபத்தில் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, காலை உணவை நீங்கள் எத்தனை மணிக்கு சாப்பிடுகிறீர்களை என்பதை பொறுத்தே உங்களின் இதய வால்வுகளை ஆரோக்கியம் அமையும் என கண்டறியப்பட்டுள்ளது.  உலகம் முழுவதிலும் உள்ள பலரிடமும் காலை முதல் இரவு வரை சீக்கிரம் சாப்பிட செய்து அவர்களின் இதய வாஸ்வுகள் எப்படி இருக்கிறது என கண்காணிக்கப்பட்டது. பிறகு தாமதமாக உணவு சாப்பிட சொல்லியும் கண்காணிக்கப்பட்டது. இதில் இரவில் தாமதமாக சாப்பிடுபவர்களுக்கு இதயவால்வு பாதிப்பு நோய்கள் அதிகம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. 




கிட்டத்தட்ட 103,000 பேரிடம் 2009 ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு இதய நோய்கள், உயர்ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, இதய வால்வு நோய்கள், பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது தெரிய வந்துள்ளது. 


ஒவ்வொரு மணிநேரம் நீங்கள் உணவை தாமதப்படுத்தும் போதும் 6 சதவீதம் இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது. காலை உணவு தவிர்ப்பவர்களுக்கும், காலை உணவை தாமதமாக எடுத்துக் கொள்பவர்களுக்கும் இது அதிகம் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.


இதே போல் இரவு உணவை தாமதப்படுத்தும் ஒவ்வொரு மணி நேரமும் இதய பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதய பாதிப்புகளால் ஒவ்வொரு ஆண்டுகம் கிட்டதட்ட 17.9 மில்லியன் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவுதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.




இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க சரியான உணவை, சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவிற்கு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும். நன்கு தூங்க வேண்டும். சரியான உணவு தேர்வு செய்து சரியான நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து குறையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


காலை உணவை எடுத்துக் கொள்ள சரியான நேரம் காலை 8 மணி என்றும், இரவு உணவை 8 மணிக்கு முன்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு 9 மணிக்கு பிறகு உணவு எடுத்துக் கொள்வது பாதிப்பை அதிகரிக்க செய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.