பாலு மகேந்திராவின்.. சிஷ்யர் கைவண்ணத்தில் "பேரன்பும், பெருங்கோபமும்".. அசத்தும் பர்ஸ்ட் லுக்!
சென்னை: பேரன்பும், பெருங்கோபமும் படத்தில் கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதையை சுவாரசியமாக திருப்பங்களுடன் உருவாகியுள்ளதாக அறிமுக இயக்குனர் சிவப்பிரகாஷ் கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜா இசையில் உருவாகியுள்ள பேரன்பும், பெருங்கோபமும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
பேரன்பும் பெரும் கோபமும் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சிவப்பிரகாஷ் அறிமுகமாகியுள்ளார். இவர் இயக்குனர் பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் மாணவராக இருந்தவர். ஜே பி தினேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை ரியோட்டா மீடியா பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் நாயகனாகவும், நாயகியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இவர்களுடன் மைம் கோபி, அருள்தாஸ், லோகு ,சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். நல்ல சிந்தனைகளை கொண்ட சாமானியனின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இவ்வுலகில் வாழும் அசலான காதலர்களை போலவே நாயகனும், நாயகியும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பிரதிபலிக்கின்றனர். இதனால் இளைய தலைமுறையினர் இடையே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
இப்படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில்,கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது.
சமூகத்தால் இயக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடன் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது என இயக்குனர் சிவப்பிரகாஷ் கூறியுள்ளார்.