மிருகமாக மாறி தந்தையைத் தாக்கிய மகன்.. அதிர வைத்த வீடியோ.. கைது செய்த போலீஸ்!

Manjula Devi
Apr 26, 2024,03:22 PM IST
பெரம்பலூர்: பெரம்பலூரில் தொழிலதிபர் ஒருவர் ஏப்ரல் 18ம் தேதி மாரடைப்பால் இறந்த நிலையில், மூன்று மாதம் கழித்து அவர் இறப்பிற்கு காரணமான கொடூர சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது பார்ப்பவரின் மனதை கலங்கடிக்க செய்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் குழந்தை வேலு. இவருக்கு ஹேமா என்ற மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். ஒரே மகனான சக்திவேல் தனது தந்தைக்கு உதவியாக அவரது தொழிலைப் பார்த்து வந்தார். குழந்தைவேலுக்குச் சொந்தமாக சேலம் மாவட்டம் ஆத்தூரில், அமிர்தா சேகோ நிறுவனம் என்ற நிறுவனம் உள்ளது. குழந்தைவேலுவும், மகன் சக்திவேலுவும் இணைத்து இந்த தொழிலை கவனித்து வருகிறனர். 

சில தினங்களுக்கு முன்பு திடீரென தன் பெயரில் இருந்த பாதி சொத்துக்களை தன் மகள் பெயரில் மாற்றியுள்ளார குழந்தைவேலு. மேலும் மகன் பொறுப்பில்லாமல் ஊரை சுற்றித் திரிவதால் தான், தன் தொழிலை கவனித்துக் கொள்ள சொன்னதாகவும்,
என் பெயரில் உள்ள மீதமுள்ள சொத்துக்களை தான் இறக்கும் தருணத்திலேயே உயிர் எழுதித் தருவதாக சொன்னதாகவும் கூறப்படுகிறது.



இதன் காரணமாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மகன் சக்திவேல் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி வீட்டின் முன்பு அமர்ந்திருந்த குழந்தைவேலுவை தன் தந்தை என்று கூட எண்ணிப் பார்க்காமல் தன் தந்தையின் வயிற்றிலேயே சரமாரியாக குத்தி தாக்கினார். இதனால் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு சரிந்து கீழே விழுந்தார். 

வீட்டிலிருந்தவர்கள் பதறிப் போய் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு மூன்று நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார்.  இதனையடுத்து ஏப்ரல் 18 ஆம்  தேதி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வேலு திடீரென மூச்சு பேச்சு இல்லாமல் இருந்துள்ளார். இதனால் உறவினர்கள் பதறிப்போய் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குழந்தை வேலுவை தந்தை என்றுகூட பார்க்காமல்  தாக்கிய  சிசிடிவி காட்சிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரவி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதைத் தொடர்ந்து பெரம்பலூர் எஸ்பி ஷ்யாமளா தேவி உத்தரவின் பேரில் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சக்திவேலுவைக் கைது செய்தனர்.

இந்த வழக்கை முன்பு எஸ்.ஐ. பழனிச்சாமி என்பவர் விசாரித்துள்ளார். ஆனால் அவர் சரியாக விசாரிக்கவில்லை என்பதால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். ஈவு இரக்கமே இல்லாமல் பெற்ற தந்தையை கடுமையாக தாக்கிய சக்திவேல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் ஆவேசமாக  கோரிக்கை விடுத்துள்ளனர்.