இந்தா கிளம்பிட்டாங்கல்ல.. தொடர் விடுமுறை எதிரொலி.. கன்னியாகுமரியில் குவியும்.. சுற்றுலாப் பயணிகள்!
கன்னியாகுமரி: வார இறுதி நாட்கள் மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூன்று நாட்கள் தொடர் அரசு விடுமுறையையொட்டி, கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை காண திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழ்நாட்டில் வார இறுதி நாட்கள் என்றாலே மக்கள் வெளியூர் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு பயணிப்பதை வழக்கமாக வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் இந்த வாரம் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு திங்கள்கிழமை கிருஷ்ண ஜெயந்தி என தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் மக்கள் சுற்றுலா தளங்களில் தங்கள் பொழுதுகளை கழிக்க படையெடுத்து வருகின்றனர். இதனால் பல சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் சுற்றுலாத்தலங்களில் கூட்ட நெரிசல்களை தவிர்க்க அரசு சார்பில் தினசரி இயக்கம் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது.
இந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் இன்று சூரிய உதயத்தை காண திரளான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றையும் மக்கள் கண்டு ரசித்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழையின் காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் களை கட்டியது. இதனால் வெளியூர்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
அதேபோல் இன்று கன்னியாகுமரி, பத்மநாபபுரம், மாத்தூர் தொட்டி பாலம், முட்டம் என அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிளின் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கன்னியாகுமரி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் இதர சுற்றுலாத் தலங்களிலும் கூட மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தொடர் விடுமுறை காரணமாக மக்கள் ஊர்களுக்குச் சென்று வருவதால் சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்