"170 வருட உயிர்".. துடிக்கத் துடிக்க வெட்டப்பட்ட மரம்.. கண்ணீர் விட்டு அழுத மக்கள்!

Su.tha Arivalagan
Feb 16, 2024,05:46 PM IST

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 170 வருட பழமையான மரத்தை வெட்டியதன் நினைவு நாளை மக்கள் கண்ணீர் விட்டு அழுது நினைவு கூர்ந்துள்ளனர்.


வரும் காலத்தில் உலகமே நெருப்புப் பந்தாக மாறப் போகிறது. வறட்சி தலைவிரித்தாடும்.. தண்ணீருக்காக போர்களே கூட நடக்கும். கடல் மட்டம் உயர்ந்து பல நகரங்களை கடல் கொள்ளும்.. என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளனர்.


ஆனாலும் இந்த மனுசப்பயலுகளுக்கு அறிவு வந்தது போலத் தெரியவில்லை. தொடர்ந்து சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தொடர்ந்துதான் உள்ளோம். மரங்களைத் தொடர்ந்து வெட்டிக் கொண்டுதான் உள்ளோம். காடுகளை அழித்துக் கொண்டுதான் இருக்கிறோம். நகரங்களின் விரிவாக்கத்திற்கும், தொழில் வளர்ச்சிக்கும் சாலைகள் தேவை, விமான நிலையங்கள் தேவை என்று கூறிக் கொண்டே வயல்கள், வனங்கள் என எல்லாவற்றையும் அழித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.




இந்த இயற்கை வளத்தை அழிக்க ஒரு கூட்டம் மும்முரமாக இருந்தாலும், இன்னொரு பக்கம் இதன் அழிவைத் தடுக்கவும், தடுக்க முடியாமலும் தவித்துக் கொண்டுதான் இருக்கிறது இன்னொரு மக்கள் கூட்டம். இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில் வெட்டப்பட்ட மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர் மக்கள்.


இதுதொடர்பாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டுள்ள ஒரு பதிவு:


ராணிப்பேட்டை மாவட்டம் விஷாரம் பகுதியில், 170 ஆண்டுகள் பழமையான ஆலமரத்தினை சாலை விரிவாக்க பணிக்காக சட்டவிரோதமாக வெட்டியுள்ளனர். இதனை எதிர்த்து பசுமைத் தாயகம் அமைப்பினர், வெட்டப்பட்ட மரத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை நடத்தினர். 


வெட்டப்பட்ட மரத்திற்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டியும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் நூதன போராட்டத்தினை நடத்தினர்.


போராட்டத்தினை அடுத்து அங்கு வந்த அதிகாரிகளிடம் வெட்டப்பட்ட மரத்தினை வேறு இடத்தில் நட்டு பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் மரத்தினை வேறு இடத்தில் நட்டு பராமரிக்கப்படும் என உறுதி அளித்தனர்.


இந்நிகழ்வை பசுமைத் தாயகம் சார்பில் இராணிப்பேட்டை சரவணன், ஆற்காடு மகேந்திரன் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மரமும் ஒரு உயிர்தான்.. மரங்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் வளர்க்க முடியும். அதைப் பயன்படுத்தி மரங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கையை இன்று நாம் பாதுகாக்காமல் அழித்து விட்டால், வருங்கால சந்ததியினர் நம்மைக் காறி துப்புவார்கள் என்பதை மறந்து விடக் கூடாது.