சென்னை மக்களே.. புதுசா பீச் ரெடியாகுது.. போக ரெடியாகுங்க... சிஎம்டிஏவின் அசத்தல் திட்டம்

Meenakshi
Jan 27, 2024,06:49 PM IST

சென்னை:  சென்னையில் உள்ள எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம் ஆகிய 3 கடற்கரைகளையும் சிறந்த சுற்றுலாத்தலமாக்கும் வகையிலும், அவற்றை சீரமைக்கும் முயற்சியில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஈடுபட்டுள்ளது.


சென்னையில் உள்ள மெரினா கடற்கரை மிகவும் பிரபலமான இடங்களில் ஒன்று. சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக  பார்க்க வேண்டிய ஒரு இடமாகும். உலகிலேயே நீளமான 2வது கடற்கரை இது. இங்கு சாலையோர பூங்காக்கள், கடைகள், நீச்சல்குளம் என நிரம்பி உள்ளது. கடற்கரையில் ஏராளமான சிற்றுண்டி கடைகள் வருகையாளர்களுக்கு பஜ்ஜி, சொஜ்ஜி, சூடான மீன் வறுவல்கள்  மற்றும் இன்ன பிற திண்பண்டங்களுக்கும் பஞ்சம் இல்லை. 


அழகிய மெரீனா




கடற்கரையில் பல்வேறு வகையான சவாரிகளையும் குழந்தைகள் அனுபவிக்க முடியும். மெரீனாவுக்குப் போகாமல் ஒரு சென்னைவாசியின் நாள் முடியாது. இந்த நிலையில், இதேபோன்று சென்னையில் உள்ள  எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம் ஆகிய மூன்று கடற்கரைகளையும் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


மெரினா கடற்கரையைப் போல, பார்க்கிங், உணவு வசதி, நடைபாதை என சகல வசதிகளுடன் மக்களை கவரும்  வகையில், எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம் ஆகிய கடற்கரைகளை அழகுபடுத்த சிஎம்டிஏ தயாராகி வருகிறது. இதற்கான விரிவான செயல் திட்டங்களை வகுக்க டெண்டர் அழைப்பு விடப்பட்டுள்ளது. இந்த கடற்கரைகளை சீரமைப்பதின் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பொதுமக்களுக்கு புதிய சுற்றுலா தளங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புத்துயிர் பெறும் பெசன்ட் நகர் பீச்




சென்னை கடற்கரைகள் மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்தின் கீழ் அழகுப்படுத்தும் பணியை சிஎம்டிஏ செயல்படுத்த உள்ளது. இதற்கு முன்னர் திருவொற்றியூர், காசிமேடு, அக்கரை மற்றும் ஈஞ்சம்பாக்கம் கடற்கரைகளையும் அழகுப்படுத்துவதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இது குறித்து சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், எண்ணூர், பெசன்ட் நகர், கோவளம் கடற்கரைகளை அழகுப்படுத்துவதற்கு விரிவான திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மேலும் கடற்கரைகளை அழகுப்படுத்தும் பணி ஆனது இந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துவங்கும். அதே போல திருவெற்றியூர், காசிமேடு, அக்கறை மற்றும் ஈச்சம்பாக்கம் கடற்கரை சீரமைக்கும் பணி ஆனது பிப்ரவரி மாதம் துவங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


எழிலாக மாறப் போகும் எண்ணூர் பீச்




எண்ணூர், தனங்குப்பம் கடற்கரையில் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிளில் ட்ராக் மற்றும் வாக்கிங் செல்வதற்காக நடை பாதைகள் அமைக்கப்பட உள்ளன. பெசன்ட் நகர் உடைந்த பாலம் முதல் திருவான்மியூர் கடற்கரை வரை அழகு படுத்தும் திட்டத்திற்கு பெஸ்ஸி 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளது. 


கார் பார்க்கிங் வசதிகள், மக்கள் சந்திப்புகள், மதக் கூட்டங்கள், கடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடற்கரைகள் 7 கிலோமீட்டர் தூரத்திற்கு அழகுப்படுத்தும் பணிகளும் நடைபெற உள்ளது. கடற்கரைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளது என்றார். 


என்ன.. மக்களே சென்னைக்கு 3 பீச் ரெடியாகிறது.. ரவுண்டு வருவதற்கு நீங்களும் ரெடியாகிக்கோங்க!