பெரிய ஸ்கிரீன்.. மரத்து மேல எத்தனை பேரு பாருங்க.. முகம்மது ஷமி கிராமத்தில் கலகல!
அம்ரோஹா, உத்தரப் பிரதேசம்: இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியின் சொந்த கிராமத்தில் மக்கள் கண்டு களித்து டீம் இந்தியாவை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்காக மிகப் பிரமாதமாக ஜொலித்த நாயகர்களில் முக்கியமானவராக உருவெடுத்துள்ளார் ஷமி. ஆரம்பத்தில் சில போட்டிகளில் அவருக்கு ஆடும் வாய்ப்பு தரப்படவில்லை. ஆனால் பிறகு கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சூப்பராக பயன்படுத்தி அதிரிபுதிரியான பந்து வீச்சைக் கொடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார் ஷமி.
குறிப்பாக அரை இறுதிப் போட்டியில் அவரது பந்து வீச்சு அனைவரையும் மிரள வைத்து விட்டது. ஷமியின் இந்த எழுச்சிதான் நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் மிக முக்கியமான அம்சமாகியுள்ளது. இந்த நிலையில் அவரது சொந்த கிராமம், உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் உள்ளது. அங்கு பெரிய ஸ்கிரீன் கட்டி அதில் போட்டியை நேரடியாக ஒளிபரப்பி வருகின்றனர். அதில் கிராம மக்கள் கூடி போட்டியை கண்டுகளித்து வருகின்றனர்.
சிறார்களும், இளைஞர்களும் மரத்தின் மீதும் ஏறி அமர்ந்து போட்டியைப் பார்த்து ரசித்து வருகின்றனர். அவர்களது ஹீரோ இன்னும் வரவில்லை. அவரது பந்து வீச்சுக்காக மொத்த கிராமமும் ஆவலுடன் காத்திருக்கிறது. தற்போது இந்தியாவின் பேட்டிங்கை அவர்கள் கண்டு களித்து வருகின்றனர்.