மக்கள் தெளிவா இருக்காங்க.. ஜோக்கர் ஒருவர் பிரதமராவதை அவர்கள் விரும்பவில்லை.. அண்ணாமலை தாக்கு

Su.tha Arivalagan
Apr 21, 2024,02:24 PM IST

கொல்லம்: யார் பிரதமராக வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து விட்டனர். அதில் அவர்கள் தெளிவாக உள்ளனர். சீட்டுக் கட்டு போல ஒரு கூட்டணி. அதிலிருந்து ஒரு ஜோக்கர் பிரதமராவை மக்கள் விரும்பவில்லை. தங்களது பிரதமர் யார் என்பதில் அவர்கள் தெளிவாக உள்ளனர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துள்ள நிலையில் அடுத்த போகஸ் கேரளா, கர்நாடகா பக்கம் திரும்பியுள்ளது. கேரளாவில் தற்போது அண்ணாமலை  முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக கொல்லம் வந்த அவர் ஏஎன்ஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியின்போது பல விஷயங்களைக் கூறினார்.




அண்ணாமலை பேட்டியிலிருந்து:


நமக்கு யார் பிரதமராக வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். அதற்கான தேர்தல்தான் இது. பிரதமர் பதவி என்பது மிக முக்கியமான ஒன்று. 52 சீட்டுகளிலிருந்து சீட்டுக் கட்டு போல கூட்டணி வைத்து அதிலிருந்து ஒரு ஜோக்கர் கார்டை எடுத்து, பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கான விளையாட்டு அல்ல அது. மக்கள் அதை விரும்பவில்லை.  இந்திய மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.


கடந்த  10 வருடமாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளை மக்கள் பார்த்துள்ளனர். நிலைத்தன்மையை மக்கள் விரும்புகிறார்கள். ஸ்திரத்தன்மையை விரும்புகிறார்கள்.  அது தொடர் வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க எதிர்த் தரப்பு விரும்புகிறது. அவர்களுக்கு அதிகாரப் பசி உள்ளது. அவர்கள் பதவிக்காக அலைகிறார்கள். அவர்களது சொத்துக்களைப் பாதுகாக்க விரும்புகிறார்கள்.  தங்களது வாரிசுகளைக் காக்க முயல்கிறார்கள்.


இப்படிப்பட்டவர்கள் எப்படி மக்களுக்கான ஆட்சியைத் தர முடியும். இப்படிப்பட்டவர்களிடம் எப்படி நாம் நமது நாட்டை ஒப்படைக்க முடியும். அவர்களுக்குள்ளேயே கூட ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லையே.  கேரளா மீது எங்களுக்கு இந்த முறை அபார நம்பிக்கை உள்ளது. கடந்த 3 தேர்தல்களில் எங்களது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த முறை கேரள மக்கள் எங்களுக்கான பிரதிநிதியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அண்ணாமலை.