பதான் கோட் தாக்குதல் சதிகாரன்.. பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

Su.tha Arivalagan
Oct 11, 2023,04:15 PM IST

டெல்லி: பதான்கோட் விமான தளம் மீது நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு முக்கிய மூளையாகத் திகழ்ந்த ஷாஹித் லதீப் பாகிஸ்தானில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.


இந்தியாவில் தேடப்பட்டு வந்த முக்கியத் தீவிரவாதிகளில் ஷாஹித்தும் ஒருவன் ஆவான். இன்று சியோல்கோட்டில் நடந்த ஒரு சம்பவத்தில் ஷாஹித் சுட்டுக் கொல்லப்பட்டான். 2016ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி இந்தியாவின் பதான்கோட் விமான தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 7 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். 3 நாட்கள் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.




இந்த சம்பவத்திற்கு முக்கிய மூளையாக திகழ்ந்தவர்களில் ஷாஹித்தும் ஒருவன். இன்று சியால்கோட்டில் உள்ள மசூதியில் தனது சகாக்களோடு ஷாஹித் இருந்தபோது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் ஷாஹித்தும், அவனது கூட்டாளி ஒருவனும் கொல்லப்பட்டனர். இவர்கள் ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


இந்த மசூதியில் மெளலவியாக வேலை பார்த்து வந்தான் லத்தீப்.  தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த 1994ம் ஆண்டு தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவன்தான் ஷாஹித். விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவன் அதன் பிறகு 2010ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டு வாஹா பார்டர் வழியாக பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டான்.


சமீபத்தில் பாகிஸ்தானில் பல்வேறு முக்கியமான தீவிரவாத அமைப்பினர் கொல்லப்பட்டுள்ளனர்.  சமீபத்தில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த முப்தி குவாசர் பரூக், ஜியாவுர் ரஹ்மான் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தற்போது ஷாஹித் கொல்லப்பட்டுள்ளார். அதேபோல கடந்த பிப்ரவரி மாதம் ராவல்பிண்டியில் பஷீர் அகமது பீர் எனப்படும் ஹிஸ்புல் அமைப்பைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.