பஸ் ஜன்னலில் சிக்கிய பயணியின் தலை.. மனுஷனுக்கு எப்படியெல்லாம் பிரச்சனை வருதுன்னு பாருங்க!

Meenakshi
Jan 25, 2024,05:16 PM IST

குண்டூர்:  அரசு பஸ்சின் ஜன்னலுக்குள் தலையை விட்டபடி வந்துள்ளார் ஒரு பயணி. கடைசியில் தலையை வெளியே எடுக்க முடியாமல் சிக்கித் தவித்தார். அரை மணி போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக சக பயணிகள் அவரை மீட்டனர்.


பஸ் பயணத்தின் போது ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் ஜன்னலுக்கு வெளியில் தலையை நீட்டாதிர்கள், கையை நீட்டாதீர்கள் என்று  கூறுவது உண்டு. இதை போர்டாக எழுதியும் வைத்திருப்பார்கள். ஆனால் பலரும் அதை மதிப்பதில்லை. அலட்சியமாக எடுத்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். கையை வெளியில் நீட்டியபடி அமர்வது, தலையை வெளியே வெளியே நீட்டுவது பலருக்கு வழக்கமாகி விட்டது. சிறுவர்களும் இதைச் செய்வது வழக்கம். 


ஆனால், எதற்காக இப்படி நடத்துனர்களும் ஓட்டுனர்களும் கூறுகிறார்கள் என்பதற்கான பதில் குண்டூரில் கிடைத்துள்ளது. ஆமாங்க, இதைப் படிச்சுப் பாருங்க.. இனிமேல் பஸ்களில் பயணிக்கும்போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பது உங்களுக்கே புரியும்.




ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தின் நெளபாடாவில்  இருந்து தெக்கலி நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த அரசு பேருந்து. பேருந்தில்  பயணம் செய்த ஒருவர் பேருந்தில் ஏறியவுடன் ஜன்னல் கண்ணாடி ஓரம்  அமர்ந்து, ஜன்னலுக்கு வெளியே தலையை வைத்து வேடிக்கை பார்த்தபடி வந்துள்ளார். வேடிக்கை பார்த்தது போரடிக்கவே தலையை வெளியே எடுக்க முயன்றார்.. அவ்வளவு தான் தலையை மீண்டும் எடுக்க முடியவில்லை. பயணியின் தலை ஜன்னலில் மாட்டிக் கொண்டது. 


அவர் அலறவே பஸ்சுக்குள் பரபரப்பாகி விட்டது. உடனடியாக, பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுனர், நடத்துனர் என அனைவரும் போராடியுள்ளனர். ஆனாலும் தலையை எடுக்க முடியவில்லை. கிட்டத்தட்ட அரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் ஒரு பயணி, அந்த பயணியின் தலையை வெற்றிகரமாக வெளியே எடுத்தார். அதன் பிறகு அங்கிருந்த அனைவருக்கும் மூச்சே வந்தது.


இதனை அங்கிருந்த சக பயணி ஓருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைராகி தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஸ்சுல போனோம்னா.. எவ்வளவு கவனமா இருக்கணும் அப்படிங்கிறதுக்கு இது ஒரு நல்ல பாடம்!.