திக் திக்.. ஆழ்துளை கிணற்றிலிருந்து.. உயிருடன் மீண்ட குழந்தை.. மறுபெயர் சூட்டி.. தாய் நெகிழ்ச்சி!

Manjula Devi
Apr 05, 2024,10:58 AM IST

பெங்களூரு: ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் அதன் பெற்றோர் பெரும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடவுள் அருளால் அவன் உயிர் பிழைத்துள்ளான் என்று கூறி சாத்விக் என்ற குழந்தையின் பெயரை சித்த லிங்கேஸ்வரர் என்று மாற்றி சூட்டப் போவதாகவும் பெற்றோர் கூறியுள்ளார்.


கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ் மற்றும் பூஜா தம்பதியினர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் சாத்விக் என்ற ஆண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தை நேற்று முன்தினம் மாலை சுமார் 4:45 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென குழந்தையை காணவில்லை. இதை அடுத்து தாய் பூஜா குழந்தையை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. வீட்டின் அருகே நீருக்காக ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டு மூடாமல் இருந்த நிலையில்,ஒருவேளை குழந்தை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆழ்துளை கிணற்றுக்குள் டார்ச் லைட் அடித்து பார்த்த போது குழந்தை உள்ளே கிடப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். 




இதனை அறிந்த போலீஸ்சார் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் நேற்று முன்தினம் மாலை 6 மணியிலிருந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்த குழந்தைக்கு டியூப் மூலம் தேவையான ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. பின்னர் குழந்தை 16 முதல் 20 அடி வரை ஆழத்தில் சிக்கியிருப்பதாகவும், அந்த குழந்தை தலைகீழாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும், மாநில பேரிடர் மீட்புக் குழுவினரும் ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் கனர வாகனங்களை கொண்டு துளையிடும் பணிகளை தீவிரப்படுத்தினர்.  


ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் துளையிடும் போது பாறைகள் தென்பட்டதால், ஆட்களைக் கொண்டு அப்பாறைகள் அகற்றப்பட்டது. அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே தாய் பூஜா உட்பட அனைவரும் குழந்தை உயிருடன் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.  அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, கிட்டத்தட்ட 20 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் குழந்தையை பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர் மீட்புப் படையினர்.  உயிருடன் குழந்தை மீட்கப்பட்டதை அடுத்து சதீஷ்- பூஜா தம்பதி மற்றும் மீட்பு குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உற்சாகமடைந்தனர்.


பெற்றோர் கூறுகையில், எங்கள் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். எங்களது மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை. இறைவன் சித்தலிங்கேஸ்வரர் அருளால் எங்கள் குழந்தை மறுபிறவி எடுத்து வந்துள்ளது. அதனால் சாத்விக் என்ற பெயருக்கு பதிலாக எங்கள் குழந்தைக்கு சித்த லிங்கேஸ்வரர் எந்த மறு பெயர் சூட்ட உள்ளோம். எங்களது குழந்தையை உயிருடன் மீட்க உதவிய மீட்பு குழுவினர், போலீசார், தீயணைப்பு படையினர், அரசு அதிகாரிகள், அனைவருக்கும் நன்றி  என்று நெகிழ்ச்சியுடன் கூறினர்.