பாராலிம்பிக்ஸ் 2024: இதுவரை 24 பதக்கங்கள்.. தொடரும் இந்தியா வேட்டை.. 13வது இடத்திற்கு முன்னேற்றம்

Manjula Devi
Sep 05, 2024,07:38 PM IST

பாரிஸ்: 17 ஆவது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 24 பதக்கங்களை கைப்பற்றி 13 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.


மாற்றுத்திறனாளிகளுக்கான 17 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் பாரிசில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி செப்டம்பர் 8 வரை நடைபெற்று வருகிறது. 167 உலக நாடுகளில் இருந்து மொத்தம் 4,400 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து 84 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர். 


குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த தங்க மகன் மாரியப்பன், சிவராஜ் சோலைமலை, மனிஷா ராமதாஸ், துளசிமதி, நித்யஸ்ரீ, கஸ்தூரி ராஜாமணி, ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன்  வெண்கல பதக்கத்தையும், இந்திய வீரர் சரத்குமார் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். 




அதேபோல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் ஜீவன் ஜி வெண்கல பதக்கம் வென்றார்.இது தவிர ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் அஜித் சிங் வெள்ளி பதக்கத்தையும்,சுந்தர் குர்ஜார் வெண்கல பதக்கத்தையும் வென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் இந்தியாவுக்கு 5 பதக்கங்கள் கிடைத்தது.  இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற ஆண்கள் கிளப் எறிதல் போட்டியில்  இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி தங்கப் பதக்கத்தை வென்றார். அதேபோல் மேலும் ஒரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.


இந்தியாவுக்கு இதுவரை ஐந்து தங்கப்பதக்கம், ஒன்பது வெள்ளி, பத்து வெண்கலம் என மொத்தம் 24 நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன. 2024 பாரா ஒலிம்பிக்  போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்று 13 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. பதக்க பட்டியலில் சீனா முதலிடத்திலும், பிரிட்டன் இரண்டாம் இடத்திலும் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்