Panguni Utthiram.. பங்குனி உத்திரம் இன்று.. 12ம் தேதி முழு நிலவு.. மிக மிக சிறப்பு!

Swarnalakshmi
Apr 11, 2025,10:54 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஏப்ரல் 11  ஆம் தேதி 20 25 வெள்ளிக்கிழமை பங்குனி 28ஆம் நாள் பங்குனி உத்திரம் நட்சத்திரம் மற்றும் பன்னிரண்டாம் தமிழ் மாதமான  பங்குனியில் வரும் முழு நிலவுடன் அதாவது பௌர்ணமி 12ம் தேதி வருகிறது. இவை இணைந்து வருவது மிகவும் சிறப்பானதாகும்.


பங்குனி உத்திரம் வழிபடும் நேரம்: காலை 9:00 மணி முதல் 10: 20 மணி வரை மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை. இந்த நாள் பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்கின்றனர் .கோயில் வழிபாடுகளிலும் பங்கேற்கின்றனர். பங்குனி மாதம் வரும் உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும் அபிஷேகம் செய்தும் அவர்களின் வேண்டுதல்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவார்கள்


தமிழ் மாதங்களில் 12 வது மாதமான   பங்குனியும் நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேர்ந்த நாள் பங்குனி உத்திரம். இந்த நன்னாளில் பல்வேறு தெய்வீக திருமணங்கள் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.


புராண கதைகள்


* ராமபிரான் சீதா தேவியின் திருக்கல்யாணம் பங்குனி உத்திரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

* முருகப்பெருமான் தன் தந்தை சிவனின் அறிவுரைப்படி இந்திரனின் மகள் தெய்வானையை மணம் செய்து கொண்டது இந்த பங்குனி உத்திர நாளில் தான்.

* மகாவிஷ்ணு மகாலட்சுமியை திருக்கல்யாணம் செய்துகொண்டதும்  இந்த நன்னாளில் தான் .

* சிவபெருமான் ,பார்வதி தேவியை திருக்கல்யாணம் செய்ததும் இந்த பங்குனி உத்திர நன்னாளில்தான் என்று புராணங்கள் கூறுகின்றன.


பரிகார பூஜைகள் செய்வது நன்று:




பங்குனி உத்திர நன்னாளில் கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம். இந்த பூஜைகள் நம்முடைய வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படுத்தும் கோவில்களில் திருக்கல்யாணம் தீபாராதனை போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் அன்று வீட்டில் இருப்பவர்கள் உணவை தவிர்த்து விரதம் இருந்து கந்த சஷ்டி கவசம் கந்தபுராணம் படிப்பது அதீத சிறப்பு .அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வது சிறப்பானது. பங்குனி உத்திரம் அன்று காவடி ,பால்குடம் எடுப்பது மிகவும் விசேஷமானதாகும். பால்குடமும் காவடி எடுப்பதால் முருக பெருமான் அருள் பரிபூரணமாக கிட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


முருகனுக்கும் 12 என்று எண்ணிற்கும் நிறைய விசேஷம் உண்டு.பங்குனி பன்னிரண்டாவது மாதம், உத்திரம் 12 வது நட்சத்திரம் ,முருகன் 12 கைகள் உடையோன், 12 செவிகள் ,12 கண்கள் உடையோன் ,ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் என்ற பெருமை உரியவன் முருகப்பெருமான்.


வீட்டில் எளிய முறை பூஜை


பூஜை அறையில் நாம் தெய்வ படங்களுக்கு மலர்களால் அலங்கரித்து, மஞ்சள் குங்குமம் இட்டு, வெற்றிலை பாக்கு வாழைப்பழம் வைத்து, நைவேத்தியமாக பால் நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்த பிரியாண முருகனுக்கு -கற்கண்டு, பேரிச்சம்பழம், வாழைப்பழம், சர்க்கரை பொங்கல் என்று தங்களால் இயன்ற நெய்வேத்தியம் வைத்து வழிபடலாம். கந்த சஷ்டி கவசம், கந்தர் புராணம், கந்தர் அனுபூதி, சிவபுராணம் ,லலிதா சகஸ்ரநாமம் போன்ற பாடல்கள் படிக்கலாம்.


வாங்க வேண்டிய பொருட்கள்


பங்குனி உத்திரமும் வெள்ளிக்கிழமையாக  இருப்பதனால் மஞ்சள் குங்குமம் வாங்குவது மங்களகரமானது. மேலும் பச்சை கற்பூரம் ,மஞ்சள் சரடு ,கண்ணாடி ,வெள்ளி தங்க நாணயம் வாங்குவது மிகவும் சிறப்பானது . அவரவர்க்கு இயன்ற நிலைமைக்கேற்ப, குடும்ப சூழ்நிலைக்கேற்ப ஏதாவது ஒரு பொருள் வாங்குவது சிறப்பு. வீட்டில் திருமண நிகழ்வு வைத்திருப்பவர்கள் திருமணத்திற்கான பொருட்களை அதாவது பாத்திரம் பண்டம், குத்துவிளக்கு, பித்தளை  வெள்ளி பாத்திரங்கள் போன்றவைகள் வாங்க சிறப்பான நாள் இந்த பங்குனி உத்திர நாள்.


மகள் அல்லது மகன் கல்யாணத்திற்கு சீர் செய்ய பொருட்கள் வாங்குவது சிறப்பானது.  பங்குனி உத்திர விழா தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு நாடுகளில், பகுதிகளில் குடியேறிய தமிழ் மக்கள் இந்த நன்னாளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர்.


முருகப் பெருமான் வாழ்க்கையில் உள்ள அனைத்து தடைகளும் நீக்கி வளமான செழிப்பான வாழ்வு அருள்வார் .திருமண வரம் வேண்டுவோர், குழந்தை வரம் வேண்டுவோர், வேலை ,படிப்பு ,உயர் பதவி குடும்ப அமைதி, குடும்ப ஒற்றுமை என நம்முடைய அனைத்து வேண்டுதல்களையும் பங்குனி உத்திரம் நன்னாளில் விரதம் இருந்து வழிபட நினைத்தது நிறைவேறும்.


அனைவருக்கும் பங்குனி உத்திரம் வாழ்த்துக்கள். தென் தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நல்வாழ்வு நல்க எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் ஸ்வர்ணலட்சுமி.