Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
Apr 10, 2025,03:44 PM IST
சென்னை: சென்னை கோயம்பேடு மார்கெட்டில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகி முருகனுக்குரிய சிறப்பான விரத தினமாகும். இது பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் மாதங்களில் 12வது மாதம் பங்குனியாகும். அதே போன்று நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்திரமாகும். எனவே 12 கை முருகனுக்குச் சிறப்பான தினமாக இந்நாள் திகழ்கிறது. இத்தினத்தில் தான் பார்வதியை பரமேஸ்வரன் மணந்தார் என்றும், ராமன் சீதையை கரம் பிடித்தார் என்றும், முருகன் தெய்வானையை கரம் பிடித்தார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
இத்தகைய பல சிறப்புகளை பெற்ற பங்குனி உத்திரம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு சந்தையில், பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இன்று கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 400 ரூபாயில் இருந்து 600க்கும், ஐஸ் மல்லி ரூ.200லிருந்து 300க்கும், முல்லை ரூ.400லிருந்து 750க்கும், ஜாதிமல்லி ரூ.450லிருந்து 750க்கும், கனகாம்பரம் ரூ.300லிருந்து 500க்கும், சாமந்தி ரூ.60லிருந்து 180க்கும், சம்பங்கி ரூ.150லிருந்து 240க்கும், அரளி பூ ரூ.200லிருந்து 350க்கும், பன்னீர் ரோஸ் ரூ.80லிருந்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.