"அண்ணாமலை தரப் போகும் சர்ப்ரைஸ் என்ன?".. அத்தனை கண்களும் பல்லடம் நோக்கி.. பரவசத்தில் பாஜக!
திருப்பூர்: " பெரிய புள்ளிகள் எங்களது கட்சிக்கு வரப் போகிறார்கள்.. அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்கள்.. பல திருப்பங்களை இனி எதிர்பார்க்கலாம்".. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ள இந்த வார்த்தைகள்தான் இப்போது எல்லாக் கட்சிகளிடையேயும் ஒரு வித பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன. உண்மையில் அப்படி என்னதான் செய்யக் காத்திருக்கிறார் அண்ணாமலை?
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, என் மண் என் மக்கள் என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டு வருகிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த பயணமானது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மேற்கொள்ளப்பட்டு தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.
அண்ணாமலைக்காக முதல் நிகழ்ச்சி
பிப்ரவரி 27ம் தேதி தனது நடை பயணத்தை பல்லடத்தில் முடிக்கவுள்ளார் அண்ணாமலை. அன்றைய தினம் பல்லடத்தில் பிரமாண்டமான விழாவுக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். அண்ணாமலையை மையமாக வைத்து நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளது இதுவே முதல் முறை என்பதால் அண்ணாமலை தரப்பு மிகவும் நெகிழ்ச்சியுடன் காணப்படுகிறது. இந்த விழாவை தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத பாஜக கூட்டமாக காட்ட அண்ணாமலை முனைப்புடன் உள்ளார்.
விழா ஏற்பாடுகளை அண்ணாமலையே நேரடியாக கவனித்து வருகிறார். ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்து செய்கிறார். விழாவை பிரமாதமாக நடத்திக் காட்ட வேண்டும் என்று அவர் உத்தரவுகளை இட்டு வருகிறார்.
இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு பெரும் உற்சாகம் தருவதற்காக அண்ணாமலை கையில் வைத்துள்ள அஸ்திரம்தான்.. முக்கியப் புள்ளிகள் பல்லடத்தில் இணைவார்கள் என்பது. இந்த லிஸ்ட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதுதான் பெரும் சஸ்பென்ஸாக உள்ளது.
விஜயதாரணி வருவாரா?
காங்கிரஸ் மூத்த தலைவரும், விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏவுமான விஜயதாரணி பல்லடம் நிகழ்ச்சியில் பாஜகவில் இணைவார் என்று ஒரு பேச்சு உள்ளது. இதை இதுவரை விஜயதாரணி மறுக்கவில்லை. எனவே இந்த பெரும் புள்ளிகள் பட்டியலில் அவரும் இருப்பதாகவே கருதப்படுகிறது.
இதைத் தவிர வேறு யாரெல்லாம் வர வாய்ப்பிருக்கிறது என்ற ஆய்வில் பல்வேறு கட்சிகளும் இறங்கியுள்ளன. தத்தமது கட்சியின் முக்கியப் புள்ளிகளை கட்சி மேலிடங்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏகப்பட்ட வழக்குகளை சுமந்திருப்பவர்கள், அதிக அளவில் சொத்து சேர்த்த முக்கியத் தலைவர்கள் உள்ளிட்டோரை தீவிரமாக கண்காணிக்கிறார்களாம்.
யார் அந்த முக்கியப் புள்ளிகள்?
திமுகவிலிருந்து பெரிய அளவில் யாரையும் இழுக்க முடியாது. காரணம், உடனடியாக வரும் அளவுக்கு அங்கு பலவீனமானவர்கள் இல்லை. மறுபக்கம், அதிமுக தரப்புதான் இப்போது பாஜகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. எனவே அங்கிருந்து முக்கியஸ்தர்கள் சிலரை இழுக்க பாஜக முயல்வதாக கருதப்படுகிறது. இதன் மூலம் அதிமுகவுக்கு நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று பாஜக நினைக்கிறது. சமீபத்தில் ஏகப்பட்ட முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களை பாஜகவில் இணைய வைத்தார் அண்ணாமலை என்பது நினைவிருக்கலாம்.
பல்லடம் விழா தமிழ்நாடு அரசியலில் திருப்பம் ஏற்படுத்தும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அது எந்த மாதிரியான திருப்பத்தை ஏற்படுத்தும், தமிழ்நாடு அரசியலில் எந்த வகையில் இது தாக்கத்தை ஏற்படுத்தும், தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு என்ன பண்ணப் போகிறார் அண்ணாமலை.. அவர் வைத்திருக்கும் சர்ப்பிரைஸ் என்ன என்பதை அறிய பல்லடம் மட்டுமல்ல, பாஜகவினர் மட்டுமல்ல.. மொத்த தமிழ்நாடுமே ஆர்வமாக காத்திருக்கிறது.