எனக்கு பயந்து தான் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு.. சொல்கிறார் சீமான்!

Aadmika
Aug 18, 2024,03:44 PM IST

சென்னை : திமுக அரசு தனக்கு பயந்து தான் முருகனுக்கு மாநாடு நடத்துகிறது என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். இதனால் முருகன் மாநாடு தற்போது தமிழக அரசியல் களத்திலும் பேசு பொருளாகி உள்ளது.


முருகப் பெருமானின் பெருமைகளை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு செல்லும் வகையில் தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு தேதிகளில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக பழனியில் நடந்து வருகிறது. பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முருக பக்தர்கள் பழனிக்கு வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.  




இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திமுக.,விற்கு பல்வேறு கேள்விகளை முன் வைத்ததுடன், திமுக.,வை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பேட்டியில் அவர் கூறுகையில், நீங்கள் முருகனுக்காக மாநாடு நடத்துகிறீர்களா? அல்லது எனக்கு பயந்து நடத்துகிறீர்களா? முருகன் ஒன்றும் திடீரென முளைத்த கடவுள் கிடையாது. பல ஆயிரம் ஆண்டுகளாக முருகன் வழிபாடு உள்ளது. அவர் தமிழ் கடவுளாக வணங்கப்பட்டு வருகிறார்.


முருகன் வேலை ஊர்வலம் சென்ற போது அதை விமர்சித்து கட்டுரை வெளியிட்டது யார்? திருமுருக திருவிழாவை நாங்கள் நடத்திய போது அதை எதிர்த்ததும், விமர்சித்ததும் யார்? இப்போது முருகனுக்கு மாநாடு எடுத்து என்ன செய்ய போகிறீர்கள்? அங்கு போய் என்ன பேசுவீர்கள்? முத்தைதரு திருப்புகழ் பாட போகிறீர்களா? எதையும் பார்க்காமல் எழுதி கொடுக்காமல் 10 நிமிட முருகன் யார் என்றும், முருகனின் பெருமைகள் பற்றியும் உங்களால் பேசி விட முடியுமா? என மிக கடுமையாக திமுக அரசை விமர்சித்துள்ளார்.