கோலாகலமாக முடிந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு.. 14 காளைகளை அடக்கி அசத்திய பொதும்பு பிரபாகரன்!

Meenakshi
Jan 16, 2024,06:30 PM IST

பாலமேடு: மதுரை மாவட்டம் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது. 10 சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் அனல் பறக்க வீரர்களும், காளைகளும் மோதிக் கொண்டனர். 42 பேர் மொத்தமாக காயம் அடைந்தனர். பொதும்பு இளைஞர் பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதல் பரிசான காரைப் பெற்றார்.


முன்னதாக, "ஜல்லிக்கட்டு... ஜல்லிக்கட்டு... தில்லு இருந்தா... மகனே மல்லுக்கட்டு" என்ற பாட்டிற்கு ஏற்றார் போல பாலமேட்டில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. பாலமேடு மஞ்சமலை ஆற்று வெளியில் காளைகளும் , மாடுபிடி வீரர்களும் மல்லுக்கட்டி ஜல்லிக்கட்டை உற்சாகப்படுத்தினர். மாடு வீரமா? மாடு பிடி வீரர் வீரமா? என்று கேட்கும் அளவிற்கு போட்டிகள் நடைபெற்றன.


பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியில் விளையாட 3,677 காளைகளும் 1,412 வீரர்களும் முன்பதிவு செய்திருந்தனர்.  இதில் தகுதியுள்ள 1000  காளைகளுக்கும், 700 வீரர்களுக்கும் டோக்கன்கள் வழங்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.




இப்போட்டியில், வெற்றி பெறும் முதல் வீரருக்கும், முதல் காளைக்கும் தலா ஒரு கார் பரிசும், இரண்டாவது வீரருக்கு பைக்கும், இரண்டாவது காளைக்கு கன்றுடன் பசு மாடு பரிசாக வழங்கப்படுகிறது.  சிறப்பாக விளையாடிய காளையர்களுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், பீரோ, டிவி, கட்டில், அண்டா உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.


பொதும்பு பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பெற்று காரைப் பரிசாகப் பெற்றார். 2வது இடத்தை சின்னப்பட்டியைச் சேர்ந்த இளைஞர் தமிழரசன் பெற்றார். இவர் மொத்தம் 11 காளைகளை அடக்கினார். கொந்தகையைச் சேர்ந்த பாண்டீஸ்வரன் 9 காளைகளை அடக்கி 3வது இடத்தைப் பெற்றார். சிறந்த காளைக்கான பரிசாக, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கும் கார் பரிசு, புதுக்கோட்டை சின்னக்கருப்பன் காளைக்கு அளிக்கப்பட்டது


பார்வையாளர்களுக்கு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது. 1500 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்பட்டிருந்தது. காளை முட்டியதில், தென்காசி மாவட்ட ஆயக்குடி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜேம்ஸ் நின்றிருந்த போது வெளியில் வந்த காளை இடுப்பில் முட்டியதில் காயம் அடைந்தார்.