பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது வாழ்த்துகள்.. விஷ் செய்த பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்
டெல்லி: 3வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. பாஜவின் வெற்றியை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் மத்தியில் ஆட்சி அமைக்க மோடி ஜனாதிபதியிடம் உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து மோடியை ஆட்சியமைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு பின்னர் நேற்று ஜனாதிபதி மாளிகையில் மோடியின் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இதில் பங்கேற்று பிரதமருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கடவுளின் பெயரால் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்வையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இடம் பெறுகிறார்கள். இதில் கேபினட் அமைச்சர்கள் - 30 பேர், இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) 5 பேர் மற்றும் இணை அமைச்சர்கள் 36 பேர் ஆவர்.
கிட்டத்தட்ட 8000 பேர் முன்னிலையில் பிரதமர் மோடி பதவியேற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழாவில் இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகம்மது முயிஸு, மொரீஷியஸ் பிரதமர் பிரவீத் குமார் ஜுகுநாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா, பூட்டான் பிரதமர் செரிங் டோப்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இந்நிலையில், 3வதுமுறையாக பதவியேற்றுக் கொண்ட பிரதமருக்கு பல்வேறு நாட்டு தலைவர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். பாகிஸ்தான் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையிலும், பாகிஸ்தான் பிரதமர், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தனது இணையதள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் வெளியிட்ட பதிவில், இந்திய பிரதமராக பதவியேற்றுள்ள மோடிக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.