பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அதிரடி கைது.. ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை

Su.tha Arivalagan
Aug 05, 2023,03:03 PM IST

கராச்சி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, பிரதமர் பதவியில் இருந்தபோது அவருக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்பனை செய்த முறைகேட்டு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் இன்று லாகூரில் வைத்துக் கைது செய்யப்பட்டார்.


70 வயதாகும் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது 2018ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அவருக்குப் பரிசாக வந்த விலைஉயர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இன்று அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.


முன்னதாக லாகூர் கோர்ட்டில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹுமாயூன் திலாவர் அளித்த தீர்ப்பின்போது, இம்ரான் கான் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்திருந்தார்.


இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இம்ரான் கானை போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல்செய்யவுள்ளதாக இம்ரான் கானின் வழக்கறிஞர் இந்தசார் பன்ஜோதா கூறியுள்ளார்.


பாகிஸ்தான் பிரதமர் பதவியை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இழந்தார் இம்ரான் கான். அதன் பிறகு இதுவரை அவர் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே மாதம் அவரை அதிரடியாக போலீஸார் கைது செய்து சென்ற செயல் பெரும் பரபரப்பையும், கலவரத்தையும் பாகிஸ்தானில் ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த நிலையில் மீண்டும் ஒரு கைதைச் சந்தித்துள்ளார் இம்ரான் கான்.