டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் ஷகீல் உலக சாதனை.. கவாஸ்கரை மிஞ்சினார்
கராச்சி: டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வீரர் செளத் ஷகீல் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கவாஸ்கர், பாசில் பட்சர், சயீத் அகமது, பெர்ட் சுட்கிளிப் ஆகியோரின் சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது இந்த சாதனையைப் படைத்தார் ஷகீல். கொழும்பில் இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இதில் 3வது நாளான நேற்று செளத் ஷகீல் தனது 7வது தொடர் அரை சதத்தை பூர்த்தி செய்தார்.
முதல் 7 டெஸ்ட் போட்டிகளில் இதுபோல அரை சதம் போட்டு இப்படி செய்த முதல் வீரர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் ஷகீல். இதற்கு முன்பு தங்களது முதல் ஆறு போட்டிகளில் இதுபோல அரை சதம் அடித்து கவாஸ்கர், பாசில் பட்சர், சயீத் அகமது, பெர்ட் சுட்கிளிப் ஆகியோர் சாதனை படைத்திருந்தனர். அதை முறியடித்துள்ளார் ஷகீல்.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்களை இழந்து 210 ரன்களை எடுத்திருந்த நிலையில் பேட் செய்ய வந்தார் ஷகீல். 57 ரன்களைக் குவித்து விட்டு ஆட்டமிழந்தார்.
முன்னதாக காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது இலங்கை மண்ணில் இரட்டை சதம் அடித்த முதல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். இவருக்கு வயது 27 தான் ஆகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கையாக மாறி வருகிறார் ஷகீல்.
காலே டெஸ்ட் போட்டியில் இவர் 208 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதற்கு முன்பு பாகிஸ்தான் பேட்ஸ்மேன் முகம்மது ஹபீஸ் எடுத்திருந்த 196 ரன்கள்தான் அதிகபட்ச தனி நபர் ஸ்கோராக இருந்து வந்தது. அதை முறியடித்தார் ஷகீல். தற்போது அரை சதம் அடிப்பதில் புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்
அடுத்தடுத்து ஷகீல் சாதனைகளைக் குவித்து வருவதால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் பல வரலாறுகளை இவர் படைப்பார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் விமர்சகர்கள் புகழாரம் சூட்டுகின்றனர்.