x தளத்திற்கு திடீரென தடை விதித்த பாகிஸ்தான்.. என்ன காாரணம்னு தெரியுமா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்துக்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமூக வலைதள உலகில் முன்னணியில் இருப்பது எக்ஸ் தளமாகும். ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட இந்த சமூக வலைதளத்தை எலான் மஸ்க் வாங்கி தற்போது எக்ஸ் என்று மாற்றி நடத்தி வருகிறார். இதற்கு தற்போது பாகிஸ்தானில் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசு வகுத்துள்ள விதிகளை பின்பற்றத் தவறியதாகக் கூறி, எக்ஸ் தளம் மீது அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாம்.
இதுதொர்பாக எக்ஸ் தளம் சார்பில் பாகிஸ்தான் கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், தடை குறித்த தகவலை கோர்ட்டில் தெரிவித்துள்ளது பாகிஸ்தான் அரசு. விசாரணையின் போது, பாகிஸ்தான் அரசின் சட்டபூர்வ உத்தரவுகளை எக்ஸ் நிறுவனம் கடைபிடிக்க தவறியது. எக்ஸ் தளத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டும், அதனை நிறுவனம் சரி செய்யவில்லை. எனவேதான் தடை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது.
தேசிய பாதுகாப்பைப் பேணுதல், பொது ஓழுங்கைப் பேணுதல் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணுதல் ஆகியவற்றின் நலன்களுக்காக பாகிஸ்தானில் ட்விட்டர் எக்ஸ் தடைசெய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.