"உலக அமைதி".. லடாக்கில் நிறைவடைந்த துறவிகள் பாதயாத்திரை..  மோடிக்கு புகழாரம்

Su.tha Arivalagan
Jul 17, 2023,04:15 PM IST
- பூஜா

லடாக் : உலக அமைதிக்காக தாய்லாந்து பௌத்தத்துறவிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட 32 நாள் ‘பாத யாத்திரை’ லடாக்கில் நிறைவடைந்தது. 

அமைதி மற்றும் நல்லிணக்கத்தை உலகளவில் பரப்பும் நோக்கில் இந்த பாத யாத்திரை நடத்தப்பட்டது. உள்ளூர் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து இதைக் கண்டு மகிழ்ந்தனர். பாதயாத்திரையின் நிறைவில் பிரதமர் நரேந்திர மோடியை உலக சமாதானத்திற்காக உழைக்கும் மாபெரும் தலைவர் என்று பெளத்த துறவிகள் பாராட்டினர்.

உலக அமைதிக்கான "தம்ம பாதயாத்திரை"யை ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் இருந்து ஜூன் 12ஆம் தேதி தொடங்கினர் இந்த துறவிகள். தாய்லாந்து, இலங்கை, நேபாளம், பூட்டான், வியட்நாம் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த புத்த துறவிகள், மதத் தலைவர்கள், மத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பக்தர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,500 பேர் இந்த அமைதி நடைப்பயணத்தில் கலந்து கொண்டனர். 



இந்தியாவிற்கான தாய்லாந்து தூதர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையின் (IMF) பிரதிநிதிகளும் அணிவகுப்பின் இறுதிக்கட்டத்தில் கலந்து கொண்டனர். 

இந்த யாத்திரையின் ஒரு பகுதியாக இருந்த தாய்லாந்தை சேர்ந்த உலக பெளத்தர்களின் (WAB) தலைவர் போர்ஞ்சாய் பலவதம்மோ, இந்தியா பௌத்தத்தின் தாய்நாடு என்றும் அது அன்றிலிருந்து இன்றுவரை அமைதியை போதித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். "இந்தியாவும் தாய்லாந்தும் இணைந்து செயல்பட்டால் உலகிற்கு அமைதியை உருவாக்கி நிலைநாட்ட முடியும். இந்தியப் பிரதமர் மோடி ஒரு சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான மனிதர், அவர் புத்தரின் போதனைகளை நன்கு புரிந்துகொண்டு அவற்றைப் பின்பற்றுகிறார்" என்றார் அவர்.

“இன்று உலகம் பல சவால்களையும் இன்னல்களையும் சந்தித்து வருகிறது. அவற்றையெல்லாம் எதிர்கொண்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்ட ஒரு சிறந்த தலைவர் தேவை, அவரே கர்மயோகியான நமது பிரதமர் நரேந்திர மோடி” என்று பௌத்தத் தலைவர் சங்கசேன கூறினார்.

யோகா, தியானம், வசுதைவ குடும்பகம் (உலகம் ஒரே குடும்பம்) போன்ற ஆன்மீக விழுமியங்களை ஒருங்கிணைத்து இந்தியா மற்றும் உலகின் பொதுவான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஒரு சிறந்த தலைவரைப் பெற்றிருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம் என்றும் அவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதில் மோடி ஆற்றிய பெரும் பங்கைக் குறிப்பிட்ட அவர், அமைதியின் கொள்கைகளை பரப்பியதற்காகவும், வன்முறைகளைத் தீர்த்து சமாதானம் ஏற்பட  செயல்பட்டதற்காகவும் அவரைப் பாராட்டினார். மோடியின் கீழ், இந்தியா குறித்த உலகளாவிய பார்வை மாறி, இந்தியா ஒரு வலுவான நாடாக உருவெடுத்துள்ளது என்றார் சங்கசேன.