வேளாண் முன்னோடி பாப்பம்பாள் காலமானார்...தலைவர்கள் இரங்கல்..!

Manjula Devi
Sep 28, 2024,11:13 AM IST

கோவை:   விவசாயத்தில் சிறந்த பங்களிப்பாற்றி பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நல குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.


கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் தான் பாப்பம்மாள் . இவருக்கு வயது 108. இயற்கை விவசாயத்தில் சிறந்த பங்களிப்பு ஆற்றியதால் இவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து கௌரவித்தது என்பது நினைவிருக்கலாம். அதேபோல் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி திமுக  சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றுள்ளார். 




இந்த நிலையில் பாப்பம்மாள் பாட்டி வயது மூப்பின் காரணமாக கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு திடீரென காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு க ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் தங்களின் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.


பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்:


பாப்பம்மாள் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில் குறிப்பாக இயற்கை விவசாயத்தில் அவர் முத்திரை பதித்துள்ளார். பாப்பம்மாளின் கனிவான இயல்புக்காக மக்கள் அவரைப் போற்றினர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் என  தெரிவித்துள்ளார்.


முதல்வர் மு க ஸ்டாலின்: 


தனது இறுதி மூச்சு வரை வயலில் இறங்கி வேளாண் பணிகளை செய்து வந்தவர் பாப்பம்மாள். பாப்பம்மாளுடன் உரையாடிய ஒவ்வொரு தருணமும் என் நெஞ்சில் எப்போதும் நீங்காமல் இருக்கும். என் குடும்பத்தில் ஒருவரை பிரிந்த வலியுடன் தவிக்கிறேன். பாப்பமாளை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என  குறிப்பிட்டுள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்