மக்களை   ஒடுக்குகிறார்கள்.. "சர்வாதிகாரம்" நீடிக்காது.. நாடாளுமன்ற வளாகத்தில் முழக்கமிட்ட பெண்!

Su.tha Arivalagan
Dec 13, 2023,06:12 PM IST


டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்திக் கைதான பெண் நீலம் கைது செய்யப்பட்டபோது கூறிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.


இன்று நாடாளுமன்றத்திற்கு உள்ளே இருவரும், வெளியே இருவரும் என்று நான்கு பேர் சேர்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். உள்ளே புகுந்த இரு இளைஞர்கள் லோக்சபாவுக்குள் ஊடுறுவி எம்.பிக்களை அதிர வைத்து விட்டனர். அதேபோல அமோல் ஷிண்டே மற்றும் நீலம் ஆகிய இருவர் வெளியே போராட்டம் நடத்தி அதிர வைத்து விட்டனர்.


போராட்டம் நடத்தி பிடிபட்ட பெண் நீலம் ஆவேசமாக  பேசினார். அப்போது அவர் கூறியதாவது:




எனது பெயர் நீலம். மத்திய அரசு எங்களுக்கு எதிராக அடக்குமுறைகளைக் கையாளுகிறது. எங்களது உரிமைகளை எங்களால் கூற முடியவில்லை. போலீஸார் தடியடி நடத்துகின்றனர். எங்களை சிறையில் தள்ளுகிறார்கள். எங்களை சித்திரவதை செய்கின்றனர். எங்களது உரிமைகளுக்காக பேச இங்கு ஊடகங்கள் இல்லை.


நாங்கள் எந்த அமைப்புடனும், குழுவுடனும் தொடர்புடையவர்கள் கிடையாது. நாங்கள் சாதாரண மக்கள். நாங்கள் மாணவர்கள். நாங்கள் வேலையில்லாதவர்கள்.


எங்களது பெற்றோர்கள் விவசாயிகள், கடினமாக உழைக்கும் கூலித் தொழிலாளர்கள், சாதாரண கடை வைத்து நடத்துபவர்கள். ஆனால் எங்களது குமுறலைக் கேட்க இங்கு யாரும் இல்லை. எங்களது குரல்கள் தொடர்ந்து நசுக்கப்படுகின்றன.


சர்வாதிகாரம் நீடிக்காது.. சர்வாதிகாரத்தை நிறுத்துங்கள். பாரத் மாதா கி ஜெய் என்று அவர் ஆவேசமாக பேசியபடி போலீஸாருடன் போனார்.