சினிமா போலவே ஓடிடிக்கும் வரப் போகுது சென்சார்.. வெப் தொடர்களுக்கும் கடிவாளம் வருது!

Manjula Devi
Sep 25, 2024,03:37 PM IST

சென்னை:   OTT தளத்தில் வெளியாகும் வெப் சீரியல் மற்றும் தொடர்களை ஒழுங்குப்படுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிடக் கோரி ஹைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.


ஓடிடி தளத்தில் சினிமா,வெப் சீரிஸ் மற்றும் வெப் தொடர்கள் போன்றவை அதிகளவில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த வெப் சீரிஸ் மற்றும் தொடர்களை ஏராளமானோர் கண்டு களித்தும் வருகின்றனர். இவற்றிற்கு ரசிகர்களும் அதிகம் உள்ளனர். ஆனால்  ஓடிடி தளத்தில் வெளியாகும் இந்த வெப் தொடர்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகளின், நடிப்பு மற்றும் உடை பலரையும் முகம் சுழிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. இது மட்டும் இல்லாமல்  தினசரி பல்லாயிரக்கணக்கான சிறுவர் சிறுமியர்களும் மாணவ மாணவியர்களும் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். 




இதனால் இணையத்தில் வெளியாகும் இந்த வெப் தொடர்களில் குழந்தைகள் பார்க்க கூடாத காட்சிகள், வன்முறையை தூண்டக்கூடிய காட்சிகளும்  இருப்பதால் அவர்களின் மனம் மாற்றத்தை நோக்கி செல்கிறது. இதனால் குழந்தைகள் தவறான வழிக்கு செல்லவும் இது வித்திடுகிறது. 


இந்த நிலையில்  சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆதிசிவம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில் ஓடிடி தளங்களில் வெளியாகும் சினிமா வெப் தொடர்களை எவ்வித தணிக்கையின்றி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தினசரி பலகோடி நபர்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒடிடி தளத்தில் வெளியாகும் சினிமா வெப் சீரிஸ்கள் மற்றும் வெப்தொடர்களை ஒழுங்குப்படுத்தி தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்திருந்தார்.


இந்த வழக்கு தொடர்பாக மத்திசய உள்துறை செயலாளர் பதில் அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்