ORS..எப்ப குடிக்கணும்.. எப்பெல்லாம் குடிக்கக் கூடாது.. இஷ்டத்திற்குக் குடித்தால் என்னாகும்?

Su.tha Arivalagan
May 06, 2024,06:23 PM IST

சென்னை: ORS எனப்படும் உடலில் நீர்ச்சத்து குறையும் போது டாக்டர்கள் பரிந்துரைக்கும்  கரைசலை நம் இஷ்டத்திற்குக் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். தாகம் எடுக்கும்போதெல்லாம் இதைக் குடித்தால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என்பது அவர்களது எச்சரிக்கையாகும்.


oral rehydration solution எனப்படும் நீர்க்கரைசல், நமது உடலில் நீர்ச்சத்து குறையும்போது குடிக்கக் கூடிய எளிமையான ஒரு முதலுதவி முறையாகும்.  வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படும்போது நமது உடலில் நீர்ச்சத்து குறையும். இதை சரியாக கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். காரணம், நமது உடல் உறுப்புகள் சீராக இயங்க நீர்ச்சத்தும் மிக மிக அவசியம். எனவேதான் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 


நீர்ச்சத்து குறைபாடு:




உடலில் நீர்ச்சத்து குறையும்போது, உடல் பலவீனமடையும். இதைத் தடுத்து நமது உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்கவும், சோடியம், பொட்டாசியம் போன்ற  சத்துக்களைத் தக்க வைக்கவும்தான் இந்த oral rehydration solution  கரைசல் பயன்படுத்தப்படுகிறது. இது வேறு ஒன்றும் இல்லை, சர்க்கரை மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் கலந்த தண்ணீர்க் கரைசல்தான். இந்த எலக்ட்ரோலைட்டுகளில் சோடியம், பொட்டாசியம் ஆகியவை கலந்திருக்கும். இவை நமது உடலின் நீர்ச்சத்தை தக்க வைத்து நமது உடல் சீராக இயங்க உதவி செய்கிறது.  இதை வீட்டிலேயும் கூட எளிதாக தயாரிக்க முடியும். கொஞ்சம் உப்பு, கொஞ்சம் சர்க்கரையை எடுத்து கூடவே கொஞ்சம் எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம். 


கடந்த 1975ம் ஆண்டு இந்த உப்பு சர்க்கரை கரைசலை யுனிசெப் நிறுவனமும், உலக சுகாதார நிறுவனமும் பயன்படுத்தி வருகின்றன. வயிற்றுப் போக்கால் அவதிப்படுவோருக்கு உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க இது மிகச் சிறந்த நிவாரணம் என்பதால் இதை உலக சுகாதார நிறுவனம் அன்று முதல் பயன்படுத்தி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த ஓஆர்எஸ் மூலம் கிட்டத்தட்ட 54 மில்லியன் மரணங்களைத் தடுக்க முடிந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.  மேலும் 1980ம் ஆண்டுக்குப் பிறகு வயிற்றுப் போக்கால் ஏற்படும் மரணங்களையும் இந்த ஓஆர்எஸ் கரைசல் குறைத்திருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஓஆர்எஸ் இஷ்டத்திற்குக் குடிக்கக் கூடாது:




ஆனால் இங்குதான் இப்போது ஒரு ஆபத்து ஒளிந்திருக்கிறது.. அதாவது நம் இஷ்டத்திற்கு இதை குடிக்கக் கூடாதாம். உண்மையிலேயே உடலில் நீர்ச்சத்து குறைந்தால் மட்டுமே இதைக் குடிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் பலர் இதை இஷடத்திற்கு வாங்கி கூல் டிரிங்க்ஸ் போல குடிக்க ஆரம்பித்துள்ளனர். இது பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு வித்திடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.


அதிக அளவில் ஓஆர்எஸ் கரைசலைக் குடித்தால் Hypernatremia என்ற பிரச்சினை உருவாக் கூடும். இது அதீத உப்புச் சத்து காரணமாக ஏற்படக் கூடியது. அதாவது நமது ரத்தத்தில் சோடியத்தின் அளவு அதிகரித்து விட்டால் வரக் கூடிய பிரச்சினை இது.  எனவே ஓ.ஆர்.எஸ். கரைசலை தேவைப்பட்டால் மட்டுமே குடிக்க வேண்டும்.  அதுவும் தேவையான அளவு மட்டுமே குடிக்க வேண்டும்.


சிறுநீரக பாதிப்பு ஏற்படும்:




இதுதவிர அதிக அளவிலான ஓஆர்எஸ் எடுத்துக் கொண்டால், தலைவலி, உடல் பலவீனம், குழப்பம், அதீத தாகம், சிறுநீரக பாதிப்பு போன்றவையும் ஏற்படலாம்.


அதேபோல, உங்களுக்கு சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை வியாதி, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்த பாதிப்பு போன்றவை இருந்தால் நீங்களும் ஓஆர்எஸ் கரைசலை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுகுறித்து உங்களது மருத்துவரின் ஆலோசனை பெற்று அதன்படியே நீங்கள் செயல்பட வேண்டும்.. நீங்களாக ஓஆர்எஸ் கரைசலை பயன்படுத்தக் கூடாது. கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


மருத்துவ ஆலோசனை அவசியம்:




உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைக்க ஓ.ஆர்.எஸ் கரைசல் மட்டுமே ஒரே வழி என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அளவு உள்ளது. அதை தவறாமல் குடித்து வர வேண்டும். வீட்டிலேயே பழங்களை ஜூஸ் போட்டுக் குடிக்கலாம். கடைகளில் விற்கும் கூல் டிரிங்ஸ்களைத் தவிர்த்து விடுவது நல்லது. அதில் வெறும் இனிப்புதான் இருக்கும். அது உடல் நலனுக்கு கேடுதான் விளைவிக்கும். வீட்டிலேயே தயாரித்து பழச் சாறுகளை அருந்துவது, நிறைய பழங்களைச் சாப்பிடுவது நலம் பயக்கும். உடலில் நீர்ச்சத்தையும் தக்க வைக்க உதவும்.


ஓஆர்எஸ் எடுத்துக் கொள்வதற்கு முன்பு உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற்று அதன்படி நடப்பது நல்லது.