கண்டக்டர் வேலைக்குக் காத்திருக்கும் பெண்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. உயர லிமிட் 150 செ.மீ ஆக குறைப்பு
சென்னை: பெண் நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கும் பெண்களுக்கான உயர அளவை 160 சென்டிமீட்டர் இருந்து 150 சென்டிமீட்டர் ஆக குறைத்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
பெண்கள் ஆண்களுக்கு நிகராக பல்வேறு துறைகளில் பணிபுரிந்தும் சாதித்தும் வருகின்றனர். அந்த வகையில் பெண்கள் தற்போது ஓட்டுனரா, நடத்துனராக பணிபுரிய தொடங்கிவிட்டனர். குறிப்பாக ஆட்டோ ஓட்டுநர், பஸ் ஓட்டுநர், லாரி ஓட்டுனர், ஏன் கன்டெய்னர் லாரியே கூட ஓட்டும் பெண்கள் பெருகி விட்டனர். அரசு பஸ்களையும் கூட பெண்கள் எளிதாக ஓட்டி அசத்தி வருகின்றனர். அதே போல பஸ் கண்டக்டர் வேலைகளிலும் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
பேருந்து நடத்துனர் பணிக்கு விண்ணப்பிக்கும் மகளிருக்கான உயரக் கட்டுப்பாடு 160 சென்டிமீட்டர் ஆக இருக்க வேண்டும் என்று இதுவரை இருந்தது. இதன் அடிப்படையில்தான் தற்போது பெண் நடத்துனர்கள் தேர்வாகி வருகின்றனர். ஆனால் இந்த உயரக் கட்டுப்பாடு காரணமாக, அதிக அளவிலான பெண்கள் நடத்துனர் பணியில் சேர முடியவில்லை என்ற குறை இருந்து வந்தது. இதுதொடர்பாக அரசுக்கம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது பெண் நடத்துனர்களுக்கான உயர அளவைக் குறைத்து அரசு புதிய அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் பணிக்கு ஏற்கனவே இருந்து வந்த 160 சென்டிமீட்டர் என்ற உயரவு அளவு தற்போது 150 சென்டிமீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி அதிக அளவிலான பெண்கள் கண்டக்டர்களாக அரசுப் பணியில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.