நான் "டம்மி"யாத்தானே இருந்தேன்.. அதிர வைத்த ஓ.பி.எஸ்!

Su.tha Arivalagan
Oct 12, 2023,01:11 PM IST

சென்னை: அதிமுக ஆட்சியில் பெயரளவில் அதிகாரம் இல்லாத பதவியாக துணை முதலமைச்சர் பதவியில் இருந்தேன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  கூறியுள்ளார்.


ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரது நம்பிக்கையைப் பெற்று மிகப் பெரிய விசுவாசியாக வலம் வந்தவர் ஓ.பி.எஸ். ஜெயலலிதா சில காலம் முதல்வர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டபோது ஓ.பி.எஸ்தான் முதல்வராக இருந்தார். அதேபோல ஜெயலலிதா மறைந்த பிறகும் கூட அவர்தான் இடைக்காலமாக முதல்வர் பதவியில் இருந்தார்.




அதன் பின்னர் காலம் மாறியது, கோலமும் மாறியது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். அவருடன் மோதல் போக்கில் சில காலம் நீடித்திருந்த ஓ.பி.எஸ் பின்னர் அவருடன் கை கோர்த்தார். துணை முதல்வரானார்.  ஓ.பன்னீர்செல்வம் மூன்று முறை  முதல்வராகவும் , ஒரு முறை துணை முதல்வராகவும் பதவி வகித்தார். மேலும், இதுவரை தான் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது கூடுதல் பெருமையாகும்.


இந்நிலையில் ஓபிஎஸ் அணியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.  கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஓ.பி.எஸ். அப்போது அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் ஆட்சியில் துணை முதலமைச்சர் பொறுப்பு என்ற சிறு அதிகாரம் கூட இல்லை .எந்த தனிப்பட்ட அதிகாரமும் இல்லை .பெயரளவில் அதிகாரம் இல்லாத பதவியாக துணை முதலமைச்சர் பதவியில் டம்மியாகத் தான்  இருந்தேன் என்றார் ஓ.பி.எஸ்.


இதன் மூலம் எடப்பாடி அமைச்சரவையில் தான் பெயரளவுக்கு மட்டுமே துணை முதல்வராக இருந்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமியிடமே அதிகாரங்கள் குவிந்து கிடந்ததாகவும் மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார் ஓ.பி.எஸ்.