சபரீசனை பார்த்த கையோடு.. டிடிவி தினகரனை சந்தித்த ஓபிஎஸ்.. அடுத்தது என்ன?
May 09, 2023,10:47 AM IST
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை பார்த்த வேகத்தில் அமமுக தலைவர் டிடிவி தினகரனை சந்தித்துள்ளார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். அடுத்தடுத்து நடந்த இந்த இரு சம்பவங்கள் சொல்லும் செய்தி என்ன என்பதே அரசியல் நோக்கர்களின் பேசு பொருளாகியுள்ளது.
ஆனால் திமுகவை வீழ்த்தவும், அதிமுகவை மீட்கவுமே நாங்கள் கை கோர்த்திருக்கிறோம். விரைவில் சசிகலாவை சந்திப்பேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். அவர் தற்போது சென்னையில் இல்லை. விரைவில் சென்னை வந்ததும் சந்திக்கவுள்ளேன். அவரிடம் இதுகுறித்து பேசப்பட்டு விட்டது. அவரும் சந்திக்க ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்திற்குப் போய் சந்தித்துப் பேசியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். ஒரு காலத்தில் இருவரும் இணைந்து செயல்பட்டவர்கள் என்பது நினைவிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது தினகரன்தான் முக்கியஸ்தராக கட்சியில் வலம் வந்தார். அவர் பெரியகுளம் எம்.பி. தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு துணை நின்றவர் ஓ.பி.எஸ்தான்.
ஆனால் காலம் என்னவோ ஓபிஎஸ் பக்கம்தான் கருணை காட்டியது. ஜெயலலிதாவைச் சுற்றி சசிகலா குடும்பமே சுற்றி நின்றாலும் கூட அதைத் தாண்டி ஓபிஎஸ்ஸைத்தான் முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுத்தார் ஜெயலலிதா. அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்றவராக திகழ்ந்தார் ஓ.பி.எஸ். ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தை விட்டு விலகிப் போக ஆரம்பித்தார் ஓ.பி.எஸ். முதல்வர் பதவியை அவர் விட்டுத் தர மறுத்து தர்மயுத்தத்தில் குதித்ததோடு அவருக்கும், சசிகலா குடும்பத்திற்குமான தொடர்புகள் முடிவுக்கு வந்தன.
இந்த நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த பல்வேறு அமளிகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக ஓபிஎஸ்ஸும் தினகரனும் சந்தித்துள்ளனர். சந்திப்புக்கு பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஓபிஎஸ் பேசுகையில், கடந்த கால வேறுபாடுகளை மறந்து விட்டு இருவரும் கை கோர்த்துள்ளோம். எப்படி சிபிஐ, சிபிஎம் ஆகியஇரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து செயல்படுகிறார்களோ அதேபோல செயல்பட்டு திமுகவைத் தோற்கடிப்போம். அதிமுகவையும் மீட்போம் என்றார்.
சந்திப்பின்போது உடன் இருந்த ஓபிஎஸ்ஸின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில்,ஓபிஎஸ்ஸும், டிடிவியும் அதிமுகவை, சமூக விரோதிகளிடமிருந்து மீட்கும் திட்டத்தில் உள்ளனர். அதன்படி அவர்கள் செயல்படுவார்கள். இதை நாங்கள் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.